Breaking News

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி.

நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் தோப்புத்துறைக்குக் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும், இச்சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் களவாடி இலங்கை நாட்டினர் சென்றுள்ளனர்.

காயமடைந்துள்ள தமிழக மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் ஒன்றிய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல் முருகன் , இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலங்கையில் சந்தித்து பேசிவிட்டு திரும்பிய சில நாட்களுக்குள் இது போன்ற சம்பவம் நடந்தேறி இருப்பது ஒன்றிய அரசின் வெளியுறவு கொள்கை முன்னெடுப்புகள் தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதனை ஒன்றிய அரசினால் தடுக்க முடியவில்லை. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். கர்நாடக எல்லையில் வனத்துறையினரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் தங்களது உயிரையும் உடமையையும் தொடர்ந்து இழந்து வருகிறார்கள்.

தமிழர்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு மேலாவது விழித்துக் கொண்டு ஒன்றிய அரசு தக்க பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி. மும்பை ஐஐடியில் மர்ம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *