Breaking News

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி.

மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் நடத்தி இருக்கின்றனர்.சொலான்கி மரணத்துக்கு நிறுவன படுகொலையே காரணம் என்று மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் APPSC எனப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் என்று தெரிவித்திருந்தது.

தொடர்ந்து ஐஐடி வளாகங்களில் தலித், முஸ்லிம் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறை இருப்பதாகவே கருதிய மாணவர்கள் மரணத்திற்கு நீதி கோரி இந்த போராட்டத்தை நடத்தி இருக்கின்றனர்.

பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் அங்கு பயின்ற தமிழ் மாணவர்களும் பங்கேற்று இருக்கிறார்கள்.

கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி சிவாஜியின் படம் சேதம் அடைந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினரான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.அத்துடன் அவர்கள் வைத்து இருந்த தந்தை பெரியார் படத்தையும் அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் நசீர் என்ற தமிழ் மாணவரின் மண்டை உடைக்கப்பட்டதாகவும் மற்றொரு மாணவருக்கு உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்ததாகவும், அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸையும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தாக்கியதாகவும் அதை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த தாக்குதலை காவல்துறையினர் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏ பி வி பி அமைப்பினரால் இடதுசாரி சிந்தனை உள்ள மாணவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மிகுந்த ஊக்கத்தோடு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது புலனாகிறது. .

ஜனநாயக ரீதியில் மாற்று கருத்து உடையவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்குதல் நடத்துவது மாணவர் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல.எனவே ஜே என் யூ பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா.
தலைவர்.
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி. நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *