மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் கண்டன அறிக்கை:
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த நசீர் (25), ஜுனைத் (35) என்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் சமீபத்தில் காணாமல் போனதாக இளைஞர்களின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
பரத்பூர் காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் தேடுதலில் ஈடுபட்ட நிலையில், ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் காரில் எரிந்த நிலையில் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்களை தடவியல் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. முதற்கட்ட ஆய்வில், எரிந்த உடல்கள் நசீர், ஜுனைத் என்றும், கூடுதல் மாதிரிகள் டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.
நசீர் மற்றும் ஜுனைதைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட மோனு மானேசர், லோகேஷ் சிங்யா, ரிங்கு சைனி, அனில், ஸ்ரீகாந்த் ஆகிய 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பிவானி (ஹரியானா) மாவட்ட காவல்துறை அதிகாரி கௌரவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இருவரையும் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மோனு மானேசர், இந்துத்துவா அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், மேலும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் பசுக் காவலர்கள் என்று கூறிக்கொண்டு அப்பகுதியில் அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளதையும் போலீசார் அம்பலப்படுத்தி உள்ளனர்.
பசுவின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற தவறுகள் இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதவண்ணம் உரிய முன்முயற்சியை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும், சமூக அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் இயங்கிவரும் பஜ்ரங் தள் அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு.
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி