மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி:
முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S.N.M.உபயதுல்லா உடல்நலக் குறைவால் இன்று நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன்.
திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி தலைவராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1989, 1996, 2001, 2006 என நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். 2006ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் வணிகவரித் துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் அயராது சமூக முன்னேற்றத்திற்கு உழைத்த அவருக்கு கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசின் சார்பில் அறிஞர் அண்ணா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தீவிர அரசியல் செயல்பாடுகளுக்கு மத்தியில் நல்லதோர் தமிழுணர்வு கொண்டவராகவும் இலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்துள்ளார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பணியாற்றிய அவர், குறள்நெறிச் செல்வர் என்று அழைக்கப்பட்டுள்ளார்.வண்ணங்கள், அலைகள், எண்ணப்பூக்கள், தோரணம், தூரல் ஆகியவை அவர் எழுதிய நூல்களாகும். “அனுபவம் பேசுகிறது” என்கிற நூல் அவரது அனுபவத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது
அரசியலைக் கடந்து என்னிடம் மிகுந்த சகோதரத்துவத்துடன் நெருங்கி பழகியவர். உடல்நலக் குறைவினால் மறைந்தார் என்ற செய்தியை அறிந்து துடித்துப் போனேன். வல்ல இறைவன் அவருக்கு உயரிய சுவனத்தை வழங்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ
தலைவர்.
மனிதநேய மக்கள் கட்சி