– சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) கடும் கண்டனம்..!
திருவாரூா் மத்திய பல்கலைகழகத்தில் 27.5.2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநா் திரு. ஆா்.என்.ரவி, சமூகநீதிக்கெதிரான புதிய கல்வி கொள்கையை ஆதரித்துப் பேசியதும் அதை நிறைவேற்ற துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியதும் வரம்பு மீறிய செயல் ஆகும்.
சமூகநீதி கொள்கையில் உறுதியாக உள்ள தமிழ்நாடு அரசையும் அதற்கு உறுதுணையான தமிழக மக்களின் உணா்வுகளையும் புண்படுத்துவதையும் அவமதிப்பதையும் இனியும் ஏற்க முடியாது.
ஆளுநரின் எதேச்சதிகார போக்கு ஜனநாயகத்துக்கும் ஏற்புடையதன்று.
மாணவர்களின் நலன் சாா்ந்த நீட் தோ்வு விலக்கு மசோதா, துணை வேந்தா் நியமன மசோதா உள்ளிட்டவைகளை நிலுவையில் வைத்து கொண்டு தொடா்ந்து புதிய கல்வி கொள்கைக்கு பிரச்சாரகராக தான் பங்கேற்கும் நிகழ்வுகளில் பேசுவதையும் ஆளுநர் நிறுத்த வேண்டும்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் முக்கிய வழக்கில் தீா்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஆளுநரும் மக்களால் தோ்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அமைச்சரவை முடிவிற்கு உட்பட்டவரே என தலையில் குட்டு வைத்த பின்னரும் ஒன்றிய அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களை பிரபல்யப்படுத்துவதையும் பிரச்சாரம் செய்வதையும் ஆளுநா் முன்னெடுப்பது வேதனைக்குரியது.
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு முன்பே அறிவித்துவிட்டது . மாண்புமிகு உயா்கல்வித்துறை அமைச்சா் முனைவா். க.பொன்முடி அவா்கள் புதிய கல்வி கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாக கூறி மீண்டும் தனது நிலைபாட்டை உறுதிபடுத்தியமைக்கு சமூகநீதி மாணவா் இயக்கம் நன்றி தெரிவித்து வரவேற்கிறது.
வழக்குரைஞா் நூா்தீன்
மாநிலச் செயலாளா்
சமூகநீதி மாணவா் இயக்கம்