மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..,
எண்ணை வளமிக்க வளைகுடா நாடுகளில் முன்னணி தேசமாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி மாகாணத்தின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
அமீரகங்கள் என்றழைக்கப்படும் அபுதாபி,துபாய்,ஷார்ஜா,அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய ஏழு தனி நாடுகளை ஒரே தேசமாக கட்டமைத்து “ஐக்கிய அரபு அமீரகங்கள்” என்ற கூட்டுறவு தேசத்தை ஏற்படுத்தி அதன் முதல் அதிபராக பணியாற்றிய அமீரகத்தின் தேசத் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் என்கிற மக்கள் தலைவரின் மூத்த மகனாகவும், அவருக்கு பின் அபுதாபி மாகாண ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும் திறம்பட செயல்பட்டவர் தான் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள்.
தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி,எண்ணை வளத்தின் பயனை தம் நாட்டு மக்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து அமீரகத்தில் வந்து பணியாற்றுபவர்களுக்கும் தாராளமாக கிடைக்கச் செய்து அமீரகத்தை நவீன தேசமாக கட்டமைத்தார். அணைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு அதன் அடிப்படையில் நாடு முழுவதும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினார். வடக்கு அமீரகங்கள் என்றழைக்கப்படும் உம்மல் குவைன், ராஸ் அல் கைமா, புஜைரா போன்ற தொலை தூர பகுதி மக்களின் நலனுக்காக சுகாதாரம்,கல்வி,வசிப்பிடங்கள், மின்சாரம்,போக்குவரத்து,குடிநீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினார். தனது “கலீபா பவுண்டேசன்” சார்பில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு விலையில்லா வீடுகளை கட்டித் தந்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனம்,ஈராக்,ஆப்கானிஸ்தான்,சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கும், மழை வெள்ளத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்ட போதும், பெரும் நிலச் சரிவினால் எகிப்து நாடு பாதிக்கப்பட்ட போதும் அந்த நாடுகளின் மறு கட்டமைப்புக்கும் ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பில் பெரும் பங்களிப்பை வழங்கினார்.
இது போன்ற பல்வேறு சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் மறைவு உலகெங்கிலும் வாழும் மனிதநேயம் கொண்டவர்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு
எம். எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி