Breaking News

கடந்த அதிமுக அரசாலும் ஒன்றிய அரசாலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கை உறுதிசெய்துள்ளது

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் செல்வம், முன்னேற்றம், ஸ்திரத்தன்மை மற்றும் நல்வாழ்வை உருவாக்குவதற்கான திறனை வெளிப்படுத்தும் ஒரு குறிகாட்டியாகும்.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதி நிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பணமதிப்பிழப்பு மற்றும் முறையற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பு கொரோனா தோற்று பரவல் போன்றவை பொருளாதார சுணக்கத்திற்கு காரணம் என்றும் பதிவு செய்துள்ளார்.

கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழக அரசின் வரி வருவாய் உபரியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை 1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வேறு எந்த மாநிலமும் வாங்காத அளவிற்கு கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 3.16 சதவீதமாக இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் கடன் இருக்கிறது என்ற புள்ளி விவர கணக்கு மிகுந்த கவலை கொள்ளச் செய்வதாக உள்ளது.

நமது பொருளாதார நிலை குறித்த விரிவான ஆய்வு செய்து முக்கியர் தரவுகளோடு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்தின் வரி வருவாயை தராமல் இழுத்தடிப்பு செய்வது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம். இந்த சரிவு சரி செய்யக்கூடியது என்று அறிக்கையின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திமுக அரசின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

தமிழக சிறப்பு பட்ஜெட் அறிவிக்கப்பட இருக்கும் இந்த சூழலில் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த வெள்ளை அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

 

அன்புடன்

எம்.எச்.ஜவாஹிருல்லா MLA

தலைவர்

மனிதநேய மக்கள் கட்சி

Check Also

மக்கள் உரிமை (18-11) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… கலைஞர் என்றும் ஓயா நினைவலைகள் கொல்லப்படும் நீதிபதிகள்: மரணபீதியில் நீதி திராவிடர் மாடலும் இஸ்லாமிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *