Breaking News

உலகெங்கும் கொடுங்கோன்மை நீங்கட்டும், மக்கள் நலன் ஓங்கட்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ. ஹாஜாகனி வெளியிடும் தியாகப் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
இஸ்லாம் மார்க்கத்தின் இருபெரும் திருநாள்களில் ஒன்றான தியாகப் பெருநாளைக் கொண்டாடும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். நெருக்கடிகள் நீங்க, நிம்மதி ஓங்க, கொடுந்தொற்றான கொரோனா அபாயத்திலிருந்து மனிதகுலம் முழுமையாக விடுதலைப் பெற, அகிலமெங்கும் அன்பும், கருணையும், பிறர் நலன் நாடும் பெருந்தன்மையும் தழைத்து வளர்ந்திட இறைவனின் பேரருளை இந்நாளில் வேண்டுவோம்.இழக்கவே இயலாத ஒன்றை இறைவனுக்காக இழந்திட முன்வரும் பெருங்குணத்தைப் பெற்றவர்கள் வரலாற்றில் வாழ்வார்கள் என்பதற்கு இப்ராஹீம் நபியும் அவரது திருமகன் இஸ்மாயில் நபியும் செய்த இணையற்ற தியாகம் சான்றாக உள்ளது. அவர்களின் தியாகத்தைப் போற்றும் நாளாகவே இந்த தியாகப் பெருநாளும் அமைந்துள்ளது.

குழந்தைப்பேறு இல்லாமல் வாடிய இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களுக்கு, அவரது தள்ளாத வயதில் இஸ்மாயில் என்ற மகனை அருளினான் ஏக இறைவன். இந்த பேரருட்கொடையை வழங்கிய இறைவனுக்காகப் பெருநன்றியுணர்வு கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் மனவுறுதியை அக்குழந்தை வாயிலாகவே இறைவன் சோதித்தான்.

பாலகன் இஸ்மாயிலையும் மனைவி ஹாஜிராவையும் ஆளரவமற்ற பாலைநிலமாக இருந்த இன்றைய மக்காவில் கொண்டுபோய் விட்டுவிட இறைவன் கனவில் ஆணையிட்டான். ஏக இறைவனுக்காக அதை நிறைவேற்றினார் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்கள்.

பசியாலும், தாகத்தாலும் பாலகன் இஸ்மாயில் ஒரு பாறையில் பிஞ்சுக் கால்களால் உதைத்து அழுது கொண்டிருக்க, தண்ணீர் கிடைக்குமோ என்ற தவிதவிப்பில் அன்னை ஹாஜிரா அவர்கள் அங்குள்ள சஃபா, மர்வா ஆகிய குன்றுகளிடையே ஏழுமுறை ஓடினார்கள்.

இறைத்தூதர் இப்ராஹிமின் பாலகன் இஸ்மாயில் மீது இறைவன் புரிந்த பெருங்கருணையின் அடையாளமாக பாறையிலிருந்து தண்ணீர் பீறிட்டெழுந்தது. அதுவே ஜம்ஜம் நீர் ஆகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறையில் சுரந்த இறையருள் ஊற்று இன்றும் பலநூறு கோடி மக்களின் பசியையும், தாகத்தையும் தீர்க்கின்ற பேரற்புதமாகத் திகழ்ந்து வருகிறது.

எவ்வித நீராதரமும், மழைவளமும் இல்லாத பாலைவனத்தில் பாறையில் ஊறிவரும் ஜம்ஜம் நீரை உலகெங்குமிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் லட்சோப லட்சம் புனிதப் பயணிகள் உண்டு மகிழ்வதோடு, தம்மோடு கொண்டும் வருகின்றனர். ஆயினும் இறைவனின் பெருங்கருணையின் அடையாளமான அவ்வூற்று, எந்நாளும் வற்றியதில்லை

வளர்ந்து சிறுவரான இஸ்மாயிலை, அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிம் நபி கனவில் இறைவன் ஆணையிட, அதைத் தனது மகனிடம் கூறுகிறார். மனமுவந்து அந்த தியாகத்திற்கு தந்தையும், மகிழ்ச்சியோடு மகனும் தயாராகின்றனர். இஸ்மாயில் நபியின் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற தீயசக்தியான ஷைத்தானை அவர் கற்களை வீசித் துரத்தினார்.

ஷைத்தானின் தடைகளைத் தகர்த்து, ஏக இறைவனுக்காகத் தன் மகனைப் பலியிட்டு ஈகம் செய்ய இப்ராஹிம் நபி முயன்ற தருணத்தில் ஓர் ஆட்டினை மகனுக்கு மாற்றாகப் பலியிடுமாறு இறைவன் ஆணையிட்டான்.

இதன்மூலம் அதற்குமுன் உலகில் நடைமுறையிலிருந்த நரபலி என்னும் கொடிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இறைத்தூதர் இப்ராஹிம், இஸ்மாயில் ஆகியோர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளே இன்றும் ஹஜ் புனிதப் பயணத்தின் கிரியைகளாக ஆகியுள்ளன. இதன்மூலம் அந்த இணையற்ற தியாகம் நினைவுகூரப்படுகிறது.

தியாகங்களே உலகை உயர்த்தியுள்ளன. மனிதகுலத்தை செழுமைப்படுத்தியுள்ளன. நாடுகளுக்கு விடுதலையைப் பெற்றுத்தந்துள்ளன. பற்றற்ற இறைவனுக்காக நமது பற்றுகளைத் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்பதே இந்நாளின் முதன்மைச் செய்தியாகும்.

இந்நாளில் குர்பானி என்ற பெயரில் இறைவன் பெயரால் அறுக்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியின் பெரும்பங்கு ஏழை எளிய மக்களுக்கு பங்கிட்டு வழங்கப்படுகின்றன. ஈகைப்பெருநாள், தியாகப்பெருநாள் ஆகிய இருபெரும் இஸ்லாமியப் பண்டிகைகளும் ஏழைகளின் மகிழ்ச்சியை மையப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே முடக்கிய கொடுந்தொற்றான கொரோனா பரவல் காலத்தில், தனது இன்னுயிரைப் பணயம் வைத்து மனிதகுலத்திற்குத் தொண்டாற்றிய மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், காவலர்கள்,

குறிப்பாக கொரோனாவால் மரணித்த ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களைக் கண்ணியமாக அடக்கம் செய்த தமுமுகவின் தொண்டர்கள் அனைவரின் மீதும் இறைவனின் பேரருள் பொழியப்படப் பிரார்த்திப்போம்.

உலகெங்கும் கொடுங்கோன்மை நீங்கவும், மக்கள்நலம் பேணும் அரசுகள் ஓங்கவும், இந்நாளில் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் இதயங்கனிந்த தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு

(ஜெ. ஹாஜாகனி)

பொதுச் செயலாளர், தமுமுக

Check Also

புதிய முறையில் பல சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்வதால் பழைய முறையிலேயே நெல் கொள்முதல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா கடிதம் புதிய …

One comment

  1. ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *