Breaking News

தியாகப்பெருநாளில் கொரோனா பெருந்தொற்று இன்னல் மறைய இறைவனை பிரார்த்திப்போம்…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி:

உலக மக்கள் அனைவரையும் நேர்வழி படுத்த தமது வாழ்க்கையில் இறையச்சத்துடனும் அர்ப்பணிப்போடும் களப்பணி செய்து வெற்றி பெற்ற இறைத்தூதர்களின் வரிசையில் நபி இப்ராஹீம் அவர்களின் வாழ்க்கை உன்னதமானது.

இப்ராஹிம் நபி மற்றும் அவர்களின் புதல்வர் இஸ்மாயீல் நபி ஆகியோரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தான் தியாகத் திருநாள் என்னும் ஹஜ் பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பக்ரீத் என்றும் இது அழைக்கப்படும்.

நபி இப்ராஹிம் ஹாஜிரா இணையருக்கு நீண்ட நாட்களாய் குழந்தை பாக்கியம் கிடையாது. இப்ராஹிம் நபி அவர்களுக்கு 85 வயதான போது இறைவன் இஸ்மாயீல் எனும் ஆண் மகவை வழங்கினான். பிறகு இப்ராஹீம் நபி அவர்களின் கனவில் தோன்றிய இறைவன் எனக்காக உன் மகனை பலியிடுக என கட்டளையிட இறைத்தூதரும் கட்டளையை நிறைவேற்ற மினா என்னும் இடத்திற்கு செல்கிறார். இறைவன் மிகப் பெரியவன் என்று கூறி மகனை இறைவனுக்காக பலியிட முயற்சி செய்கிறார். சோதனையில் வெற்றி பெற்று மகன் இஸ்மாயீலை பலியிடும் தருவாயில் மகனுக்கு பதிலாக ஆட்டை பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டான். இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தார் நபியவர்கள்.

இப்ராஹிம் மற்றும் இஸ்மாயீல் ஆகிய இறைத்தூதர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக தான் உலகமெங்கும் இந்தப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தியாகத்தின் பெருமையை உலகிற்கு விளக்கும் உன்னதப் பெருநாள் தியாகத் திருநாள். உடல் பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மன ஓட்டத்தை அனைவரும் பெற்று வாழ்வியலை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தியாகத் திருநாளின் அடிப்படை நோக்கம். தியாகமும் தர்மமும் மனித சமுதாயத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும். மனிதர்கள் மீது காட்டப்படும் அன்பும் அக்கறையும் தான் உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தழைத்தோங்க செய்யும்.

கடந்த ஆண்டு ரமலான் பெருநாள் மற்றும் தியாத்திருநாள். இந்த ஆண்டு ரமலான் பெருநாள் ஆகியவற்றை பெருந்தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் கொண்டாட முடியாத நிலை விலகி இவ்வாண்டு பள்ளிவாசலில் தியாகத் திருநாளை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் கொரோனா பெருந்தொற்று விலகி விட்டது என்ற அலட்சிய மனநிலையில் இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தப் பெருநாளை கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்;

கொரோனா பெருந்தொற்றின் இன்னல்கள் மறைந்து உலகெங்கும் அமைதி சமாதானம் மனிதநேயம் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கிட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றியும் கருணையும் உதவும் கொடை உள்ளமும் நம் மனங்களில் பெருகட்டும். அனைவருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

மக்கள் உரிமை (18-10) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… பனிக்கும் கண்களுடன் மூத்த பாஜகவினர் ( இது ஆனந்த கண்ணீர் அல்ல) காவலுக்கு உறக்கமா? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *