Breaking News

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
திரைப்படத்தை பொதுவெளியில் காண்பிப்பதற்காக சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அந்தந்த மாநிலத்திற்கு இதுவரை இருந்து வந்துள்ளது. தற்போது ஆளும் ஒன்றிய அரசு திரைப்பட தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு மட்டுமே உண்டு என்ற நோக்கத்துடன் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.
1991 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றமும் 2000ம் ஆண்டு உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது. இதனைத்தான் தற்போதைய ஒன்றிய அரசு திருத்தம் மூலமாக மாற்றவேண்டும் என்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வருமாயின் ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழைக் கூட மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிட மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இதுபோன்ற முன்னெடுப்புகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதோடு மட்டுமல்லாமல் கருத்துச் சுதந்திரத்திற்கும் வேட்டு வைக்கும் செயலை ஒன்றிய அரசு முன்னெடுக்கிறது. இந்தப் புதிய வரைவு மசோதா, ஒன்றிய அரசு மக்கள் மீது திணிக்க விரும்புவதை மட்டுமே திரைத்துறை மூலம் நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கும் சூழல் உருவாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த தேசத்தில் பல்வேறு கலை, பண்பாடு, கலாச்சாரம் போன்ற தளங்களில் சங் பரிவார் பாசிச சித்தாந்தங்களைத் திணிக்கும் முயற்சியை தான் ஆளும் பாஜக ஒன்றிய அரசு செய்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

மக்கள் உரிமை (18-10) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… பனிக்கும் கண்களுடன் மூத்த பாஜகவினர் ( இது ஆனந்த கண்ணீர் அல்ல) காவலுக்கு உறக்கமா? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *