Breaking News

கொடுந்தொற்று கொரோனா காலத்தில் ஒன்றிய அரசின் குடிகெடுக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்ட செயலாக்க முயற்சியை எதிர்த்து தமுமுக நடத்தும் மாபெரும் கண்டனப் போராட்டம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ. ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை:

அண்மையில் ஒன்றிய பாஜக அரசு குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து குடியேறி வசித்து வருகின்ற முஸ்லிமல்லாதவர்கள் மட்டும் இந்தியக் குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த கொடூரமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு இதுவரை விதிகள் ஏதும் வகுக்கப்படாத நிலையில், 1955ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையிலேயே தனது மதவாத சதித்திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு துணிந்துள்ளது.

2018ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் போராடியது. நாடு முழுவதும் ஷாகின்பாக்குகளில் இலட்சக்கணக்கான பெண்கள் திரண்டு போராடிவந்த நிலையில் கொரோனா கொடுந்தொற்று அபாயம் உலகையே உலுக்கியதால் அப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகளுக்கு நேரெதிரான, மதவெறி அடிப்படையிலான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக செத்து விழும் நேரத்தில், ஈவு இரக்கமின்றி மோடி அரசு நிறைவேற்ற முன்வந்துள்ளதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒன்றிய அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சந்தித்துள்ள படுதோல்வியை மறைப்பதற்காக இந்த மதவாத சட்டத்தை நடைமுறைப்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சினையை திசைதிருப்ப முயல்கிறது.

இந்த சர்வாதிகார சதிச்செயலைக் கண்டித்து தமுமுக சார்பில் ஜூன் 2, 2021 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு வீடுகள் முன் கண்டனப் பதாகைகள் ஏந்தி முழக்கமிடும் போராட்டத்தை தமுமுக நடத்தவுள்ளது.

கொரோனா ஊரடங்கு கால விதிகளை முற்றிலும் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு, ஒவ்வொரு இடத்திலும் பத்து பேருக்கு மிகாத வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்பதை அன்புடன் தெரிவிக்கிறோம்.

இப்படிக்கு
ஜெ. ஹாஜாகனி
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

Check Also

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *