Breaking News

சமுதாய கண்மணிகளே..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சிறந்த உடல் நலத்துடனும் சீரான உணர்வுகளுடனும் இக்கடிதம் உங்களை சந்திக்கட்டும் என்று வல்ல இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து தொடங்குகிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது மிகுந்த அர்ப்பணிப்புடன் பாசிசத்தை வீழ்த்த உத்வேத்துடன் பணியாற்றிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவான அருள்வளங்களை வழங்க வேண்டும் என்று முதலில் பிரார்த்தனை செய்கிறேன்.

இறைவனின் அருள்வளம் நிறைந்த ரமலான் நம்மை வந்தடைந்துள்ளது.உலக மக்களுகெல்லாம் வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் நம்மை வந்தடைந்து விட்டது. சென்ற ஆண்டு ரமலான் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இறையில்லங்களெல்லாம் பூட்டப்பட்ட நிலையில் வீட்டிலேயே ரமலான் இரவு பொழுதுகளை கழித்தோம். இந்த ஆண்டு பள்ளிவாசலுக்குச் சென்று ரமலானை அனுபவிக்கலாம் என்ற பெரும் ஆர்வத்துடன் நாம் அனைவரும் இருந்தோம். ஆனால் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நாட்டையே அதிரவைத்துள்ளது.

இச்சூழலில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக பெருந்தொற்றுக்கிடையே நாம் ரமலானை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தச் சின்னஞ்சிறு கொரோனா கிருமியின் தாக்கம் உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் பாதித்துள்ளது. உலக முழுவதும் 12.8 கோடி மக்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 30லட்சம் பேர் அதனால் உயிரிழந்துள்ளார்கள். கொரோனா தொற்று நாம் வாழும் காலத்தில் மிக நெருக்கடியான ஒரு அனுபவத்தை நமக்குத் தந்துள்ளது.

மனித குலம் முழுவதும் ஒரு நிலையில்லாத சூழலை எதிர்நோக்குகின்றது. மனிதன் இயற்கையில் ஒரு பாதுகாப்பான வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புகிறான். நிலையான பாதுகாப்பான வாழ்வு வாழ்வோம் என்ற அடிப்படையில் தான் அவன் தனது செயற்பாடுகளை திட்டமிடுகிறான். ஆனால் கொரோனா அனைத்தையும் தலைகீழாகப் புரட்டி போட்டுவிட்டது.

இறைவனைத் தவிர உலகில் எதுவும் நிலைத்து நிற்காது என்பதை இத்தருணம் மீண்டும் உண்மைப்படுத்துகிறது. திருக்குர்ஆனில் அல்லாஹ். “மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்” திருக்குர்ஆன் 55:27 என்று குறிப்பிடுகிறான்.

ரமலானை அடைந்திருக்கும் நாம் இந்த சோதனையான காலக்கட்டத்திலும் நமது வாழ்வின் இலட்சியத்தை விளங்கிக் கொள்ள ரமலானை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் –திருக்குர்ஆன் 2:183

ரமலான் இறைவன் புறம் திரும்பி நமது இறையச்சத்தை வலுப்படுத்த உதவுகிறது. நோன்பு கடமையாக்கப்பட்டத்தின் அடிப்படை நோக்கமே இறையச்சத்தை வலுப்படுத்துவது தான். எனவே ரமலானை முழுமையாக நாம் இறையச்சத்தை வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் இது வரை வாழ்வில் சந்தித்திராத கொரோனா அச்சுறுத்தலை துணிச்சலாக எதிர்கொள்ளும் வகையில் நமது இறையச்சத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் இந்த ரமலானை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா காலக்கட்டத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொள்வதும் மிக அவசியமாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் “மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்காதீர்கள் மற்றவர்கள் உங்களுக்கு தீங்கிழைக்கவும் அனுமதிக்காதீர்கள்” என்று எச்சரித்துள்ளார்கள். (இப்னு மாஜா) கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் கண்டிப்பாக கடைப்பிடிப்பது காலத்தின் கட்டாயமாகும். நமது கவனக்குறைவினால் பிறருக்கு தீங்கிழைக்க கூடியவர்களாக நாம் ஆளாகிவிடக் கூடாது. இதே போல் பிறரின் தீங்கிலிருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த நபிமொழி நமக்கு சரியாக வழிகாட்டலை அளிக்கின்றது.

இந்த அடிப்படையில் பொதுவாக மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முகக் கவசம் அணிவதும் முக்கியம். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்த ரமலானை நாம் அனுபவிக்க வேண்டும். அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு பள்ளிவாசல்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இரவு தொழுகையை முடித்து விட்டு வீதிகளில் நண்பர்களுடன் வீணாக நேரத்தை கழிக்காமல் இல்லம் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை நமது கடமையாக செயல்படுத்துவோம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பின் வரும் எச்சரித்துள்ளார்கள் என்பதையும் இந்த ரமலானில் நாம் மறந்து விட வேண்டாம். ‘எத்தனை எத்தனையோ நோன்பாளர்களுக்கு பசியோடு பட்டினி கிடந்ததைத்தவிர வேறு எதுவுமே கிடைப்பதில்லை!, எத்தனை எத்தனையோ இரவு நேரத் தொழுகையாளிகளுக்கு வெட்டியாய் விழித்திருந்ததைத் தவிர வேறு எதுவுமே கிடைப் பதில்லை!’ (ஆதாரம்: நஸயீ, இப்னு மாஜா) எனவே ரமலான் இரவு பொழுதுகள் வெட்டி அரட்டைக்கு என்ற அடிப்படையில் செயல்படும் சகோதரர்களே இந்த ரமலானில் புதிய வரலாற்றைப் படிப்போம்.
திருக்குர்ஆனை இல்லத்தில் அமர்ந்து ஒதுவோம். இல்லத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து வழிபாடுகளில் ஈடுபடுவோம். இல்லத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மார்க்கத்தை கற்போம். கற்பிப்போம் என்ற உறுதியை எடுப்போம்.

குறிப்பாக கண்மணிகளே இந்த ரமலானுக்காக பல செலவுகளை நாம் செய்யவுள்ளோம். எனது வேண்டுகோள் நீங்கள் சென்னை ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்னு கஸீர் திருக்குர்ஆன் விளக்க தொகுதிகளை வாங்கி இந்த ரமலான் முழுவதும் படித்து முடிப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்துக் கொள்ள இந்த அருமையான தப்சீர் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

எத்தனை சோதனை வந்தாலும் துணிச்சலாக அதனை எதிர்கொள்ளும் மனவலிமையுடையவர்கள் நீங்கள்.
இந்த ரமலானிலும் அனைத்து மக்களுக்கும் தேவையான தொண்டுகளை ஆற்றுங்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவைகளை இல்லம் தோறும் கொண்டு சேருங்கள்.எல்லாம் வல்ல இறைவன் இந்த ரமலானின் முழு பலன்களை நாம் அனைவரும் அனுபவிக்க கிருபை செய்வானாக. கொடிய நோயிலிருந்து மனிதகுலத்தை காப்பானாக.

அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *