மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
“ஸ்டாலின்தான் வாராரு, விடியலைத் தரப் போறாரு” என்ற தலைப்புடன் தமிழகம் முழுவதும் திமுக செய்த தேர்தல் பரப்புரையின் ஒப்புதல் வாக்குமூலமாக, தமிழகத்தை சீர்தூக்கி தலை நிமிர்த்தும் வகையில் அமைந்துள்ளது திமுகவின் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிக்கை.
தமிழகத்தின் நலிவடைந்துவிட்ட பொருளாதாரம், தொழில்துறை, வணிகம், விவசாயம், மின்துறை என ஒவ்வொரு துறையின் சீரமைப்புக்கும், மறுமலர்ச்சிக்கும் வித்திடும் முத்தான வாக்குறுதிகளுடன், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி, நீட் தேர்வு ரத்து, வேளாண்மைக்கு தனி பட்ஜெட், ஆசிரியர் பணி நிரந்தரம், உழவர் சந்தைக்கு உயிரூட்டல், ரேஷனில் மீண்டும் உளுத்தம்பருப்புடன் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும், மழைநீர் கடலில் கலப்பதைத் தடுக்க 200 தடுப்பணைகள், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு, கொரோனா நிதியாக ரூ.4000, மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு டவுன் பேருந்துகளில் இலவசம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம், மாணவிகளுக்கு இலவச நாப்கின், ஆட்டோ வாங்கவும், மின்மோட்டார் வாங்கவும் ரூ.10000 மானியம் ஆகியவை மெச்சத்தகுந்த அறிவிப்புகளாகும்.
சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகிய குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் இச்சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சிறுபான்மை பெண்களுக்கு சிறப்புச் சலுகையுடன் கல்வி மேம்பாட்டுத் திட்டம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மை சமூகம் உரிய பங்கினைப் பெற நீதியரசர் சச்சார் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை, இப்படி அனைத்து தரப்பு மக்களின் மனக்குமுறல்களுக்கு மருந்தான அறிவிப்புகள், தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்துவிட்டன.
நீண்டகால கோரிக்கைகளான பத்திரிகை, ஊடகத் துறையினருக்கு தனி வாரியம், திருக்குறளை தேசிய நூலாக்க முயற்சி, தேவாலயங்கள், பள்ளிவாசல்களைப் புனரமைக்க ரூ.200 கோடி, சுயஉதவிக்குழு, மாணவர் கல்விக் கடன் ரத்து, கடன் சுமை தீர்க்க பொருளாதார மேலாண்மை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்ற வாக்குறுதிகள் வளமான தமிழகத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
ஒட்டுமொத்தமாக இந்த தேர்தல் அறிக்கை அடித்தட்டு மக்கள் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்துத் தரப்பினரின் வாழ்வில் மறுமலர்ச்சியையும் கொண்டு வரும் வகையில் அமைந்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகிறது.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி