Breaking News

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் அதானி குழுமத்திற்கு நாட்டின் பல மாநிலங்களில் உள்ள 8 துறைமுகங்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மிக பெரும் சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் அதானி குழுமத்திடம் காட்டுப்பள்ளி துறைமுகம் ஒப்படைக்கும் இந்த நாசகர திட்டத்தின் காரணமாக சுமார் ஒரு இலட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சுமார் 35 லட்சம் தமிழக மக்கள் வெள்ள அச்சுறுத்தலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் இயற்கை வளமும் பெரிதும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திரவில் உள்ள 82 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே எஞ்சி கடற்கரை அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் நேரிடும். இதன் விளைவாக சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது.

இத்திட்டம் வரவிருக்கும் காட்டுப்பள்ளி பகுதிக்கு வடக்கில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. தெற்கில் எண்ணூர் கழிமுகமும், மேற்கில் பக்கிங்காம் கால்வாய் சூழப்பட்டிருப்பதால் இது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக CRZ-1 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதின் மூலமாக சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி அழிவதற்கான வாய்ப்புள்ளது.

இத்திட்டம் குறித்த மக்கள் கருத்து அறியும் கூட்டம் வரும் ஜனவரி 22 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய இடைவெளியில் இக்கூட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதாலும் கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவதும் பெரும் ஆபத்தில் முடிந்து விடும். எனவே இக்கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றோம். இதனையும் மீறி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நானும் எம் கட்சி உறுப்பினர்களும் பெரும் அளவில் இக்கூட்டத்தில் பங்கு கொள்வோம்.

அதானி குழுமத்தின் கொள்ளை லாப வெறிக்கு உதவுவதற்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, இயற்கை வளத்தைக் காவு கொடுத்து சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக மாற்றவுள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனே கைவிட வேண்டும் என்று கோருகிறோம்.

இப்படிக்கு..
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *