Breaking News

பேராசிரியர் தொ. ப. மரணம் – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை

சீரிய தமிழறிஞரும் ஆற்றல்மிக்க மானுடவியலாளரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்கள் மரணித்த செய்தி பெரும் வேதனையையும் துன்பத்தையும் அளிக்கின்றது.
இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹீசைன் கல்லூரியில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கி பிறகு மதுரை தியாகராயர் கல்லூரியில் பணியாற்றி விட்டு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி செயல் திறன்மிக்க ஆளுமைகளை உருவாக்கியவர் பேராசிரியர் தொ பரமசிவம். தொ. ப என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பேராசிரியர் தொ பரமசிவம் அவர்கள் மூட்டா என்னும்; கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகியாக இருந்து ஆசிரியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்.

திராவிட கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர் தொ.ப. எளிமையான மொழியின் வழி நுண்ணரசியலைத் தமிழக மக்களுக்குப் புரிய வைத்தவர். இவர் எழுதிய அறியப்படாத தமிழகம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழ் வாசிப்பு தளத்திலும் சிந்தனை தளத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க வல்லவை.
திராவிட இயக்கம் பொதுவுடைமை இயக்கம் நாட்டார் வழக்காற்றில் ஆய்வுகள் போன்றவற்றில் நாம் பார்க்க தவறிய பல்வேறு தளங்களில் பேராசிரியர் தொ பரமசிவம் மேற்கொண்ட ஆய்வுகள் வரலாற்று பொக்கிஷம் எனலாம்.காலம் காலமாகத் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள பல கருத்துக்களுக்கு புது வெளிச்சம் பாய்ச்சியவர். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இந்தியாவின் பன்முக பண்பாட்டை ஒழித்து வரலாற்றுத் திரிபுகள் அரசின் உதவியுடன் செய்யப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் துணிவுடனும் சான்றுகளுடனும் உண்மை வரலாற்றை எடுத்துரைக்க வரலாற்றாய்வாளர்கள் அதிகமாகத் தேவைப்படும் இக்காலகட்டத்தில் பேராசிரியர் தொ.ப. மறைந்துள்ளது பேரிழப்பாகும். அவரது அறிவார்ந்த நூல்களை வளரும் தலைமுறையினரிடம் பரப்புவது அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும்.
பேராசிரியர் தொ.ப. அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *