சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் ஜனவரி 1 முதல் குப்பைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
மாநகராட்சிக்கான சொத்து வரியினை செலுத்தும் போது இந்த கட்டணத்தைச் சேர்த்துச் செலுத்த வேண்டும் என்றும் வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 முதல் 10,000 வரையும், உணவகங்களுக்கு 300 முதல் 5,000 வரையும் கட்டணம் வசூல் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தவிர ஆர்ப்பாட்டங்கள், பொது கூட்டங்கள், மத திருவிழாக்கள் முதலிய நிகழ்ச்சிகள் திறந்த வெளியில் நடைபெறும் போது அதில் பங்கு கொள்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணாக அமைந்துள்ளது. ஏற்கெனவே சொத்து வரி செலுத்தும் போது குப்பைக்கு தனி வரி என்று இப்போது விதிக்கப்படுவது இனி சொத்து வரியுடன் மக்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலைக்கும் செல்லக் கூடும். இந்த நடவடிக்கை என்பது படிப்படியாகச் சென்னை மாநகராட்சியை முழுமையாக தனியார் மயமாக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து தமிழக அரசு செயல்பட்டு வருவதின் முன்னோட்டமாக திகழ்கின்றது.
கொரோனா காலக்கட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பல தரப்பட்ட மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் குப்பைக் கட்டணம் ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீர் வரி என பல்வேறு வரிகளைச் சென்னை மக்கள் செலுத்தி வரும்போது அந்த வரிக்கேற்ப தரமான சேவையை அளிக்காத சென்னை மாநகராட்சி தற்போது குப்பைக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது சென்னை மாநகர மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாவே அமைந்துள்ளது.
எனவே, இந்த குப்பை கட்டண அறிவிப்பைச் சென்னை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி