-மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை…
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வியகத்தில் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக வந்துள்ள தகவல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐ.ஐ.டி களை உயர்தகுதி மிக்க கல்வி நிறுவனமாக (Institute of Excellence) அறிவிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ள குழு ஒன்று பரிந்துரைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும் நிறுவனங்கள் இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் மத்திய கல்வி அமைச்சர் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெரும் முயற்சியால் அரசு நிறுவனமாக உருவாக்கப்பட்டவை ஐ.ஐ.டி.க்கள். நாட்டின் தலைசிறந்த நிறுவனமாக இன்று ஐ.ஐ.டி.க்கள் உயர்ந்துள்ளதற்கு ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது எவ்வகையிலும் *தடையாக* இருக்கவில்லை. இடஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஐ.ஐ.டி. யின் ஏராளமான பேராசிரியர்கள் தமது துறையில் உலகம் போற்றும் சாதனைகளை படைத்துள்ளார்கள்.
எடுத்துக்காட்டாக சென்னை ஐ,ஐ.டி.யின் கணித துறையில் பணியாற்றிய முனைவர் வசந்தா கந்தசாமி உலகம் போற்றும் கணித பேராசிரியராக திகழ்கிறார்.
சமூக நீதிக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சகம் இந்த பரிந்துரையை செய்துள்ளது.
இப்போது ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழிக்க முனையும் பாஜக நாளை மாணவர்கள் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டை ஒழிக்க முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூத்தினருக்கும் எதிரான பாஜக வின் இந்த சமூக நீதி விரோத கொள்கையை முறியடிக்க சமூக நீதியில் நாட்டம் உள்ள அனைவரும் ஒன்று சேர்வது காலத்தின் கட்டாயமாகும்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்