விவசாய நிலங்களை அபகரித்து சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு விதித்த தடை செல்லாது என்றும் இதனை மத்திய அரசு செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுமேயானால் பத்தாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகும் என்பதால் மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், “முதல் கட்டமாகச் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு. அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் வருவாய்த்துறை வழிகாட்டுதல்களுடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள உத்தரவின்படி இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனே உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்தால் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் காக்க இந்த திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி