Breaking News

மறக்க முடியாத டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினமாக கடைப்பிடித்தது தமுமுக!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறைக் கும்பலின் உக்கிரமான பயங்கரவாதத்தால் அக்கிரமமான முறையில் வீழ்த்தப்பட்ட டிசம்பர்.6ம் நாளை நீதி பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது.

பாபரி மஸ்ஜித் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 450 ஆண்டு வரலாறு கொண்ட பள்ளிவாசல். பாபரி பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பட்டப்பகலில் பள்ளிவாசலை இடித்தவர்களை விடுவித்து வழங்கப்பட்ட தீர்ப்பும் வேதனைக்குரியது வெட்கக்கரமானது.

எனவே, சமகாலத்தில் இந்த துரோக வரலாற்றை என்றும் மறக்க மாட்டோம் என்பதைப் பறைச்சாற்றி நினைவூட்டி, நாட்டின் சமயசார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய உயர் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கும் அரசியல் சாசனத்தின் முதன்மைப் பாதுகாவலாகிய உச்சநீதிமன்றத்தின் மனசாட்சியை நோக்கி வினாக்களைத் தொடுப்பதற்கும் நீதி பாதுகாப்பு தினம், டிச.6 ஆக அறிவித்து கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவேரா ஆகியோர் உரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நம்பிக்கையின் அடிப்படையிலும், சட்டத்திற்கு முரணாகவும் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து சட்டப்படியான நியாயமான தீர்ப்பினை வழங்க வேண்டும் என இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

2. பாபரி மஸ்ஜித் இடிப்பு டிசம்பர் 6, 1992 அன்று பட்டப்பகலில் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி பயங்கரவாத முறையில் நடத்தப்பட்டது. உலகையே அதிரவைத்த குற்றச்செயல் என்று உச்சநீதிமன்றம் வர்ணிக்கும் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த தண்டனையுமில்லை என்பது நீதி பரிபாலனத்தில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைகுலைய வைப்பதாக உள்ளது. எனவே பாபரி மஸ்ஜித் இடிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பயங்கரவாதச் செயலைத் தூண்டிய, ஆதரித்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

3. பாபரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத சக்திகள் நாடு முழுவதும் இதே பாணியில் பல நூறு பள்ளிவாசல்களைக் கையகப்படுத்தப் போவதாக வெளிப்படையாக அறிவித்து அதற்கான களப்பணிகளைச் செய்து வருகின்றனர். காசி, மதுரா ஆகிய நகரங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல்களையும், உலக அதிசயமான தாஜ்மஹாலையும் இடித்து, கோவிலாக மாற்றப் போவதாக மிரட்டி வருகின்றனர். பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு இவர்களுக்கு ஓர் ஊக்கமாக அமைந்துவிட்டது வேதனைக்குரியது. பாபரி மஸ்ஜிதிற்குப் பின் எந்த ஒரு பள்ளிவாசலுக்கும், தேவாலயத்துக்கும், கோவிலுக்கும் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கப்பட மத்திய மாநில அரசுகளும், நீதிமன்றங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

இந்த கருத்தரங்கத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் நசீருதீன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் அப்துல் சலாம், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் அபூபக்கர் என்ற கோரி முஹம்மது உள்ளிட்ட நு£ற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக் கொண்டனர்.

இவண்
தமுமுக தலைமையகம்

Check Also

பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!

31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *