Breaking News

மைசூரு இந்திய மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைப்பு!மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்தை பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தி அதில் செம்மொழிகளை துறைகளாக இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. மத்திய அரசின் இந்த முடிவை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது.

மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் தமிழ்மொழி சேர்க்கப்பட்ட பின்பு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் இயங்கிவருகிறது.

ஆனால் அந்நிறுவனத்திற்கு 13 ஆண்டுகளாகச் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநரை மத்திய அரசு நியமிக்காமலிருந்ததால் அந்நிறுவனத்தின் வளர்ச்சியும், செம்மொழித் தமிழின் ஆய்வுகளும் முடங்கியது. மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் தமிழ்மொழி அறிஞர்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் சில வாரங்களுக்கு முன்பு செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இயக்குநர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் உயிரோட்டமுள்ள தமிழ் மொழி சார்ந்த அரசு நிறுவனத்தை அழியும் நிலைக்குத் தள்ள நினைக்கும் மத்திய அரசு இந்த நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்தது. இந்த முடிவை அரசியல் கட்சிகள் எதிர்த்ததால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை இணைக்கும் முடிவைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு.

தற்போது அதே பாணியில் மைசூரு இந்திய மொழிகள் நிறுவனத்தை பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தி அதில் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியை ஒரு துறையாக இணைக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய செம்மொழிகளுக்கு மத்திய மொழி ஆய்வு நிறுவனங்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தால் அதனை இணைக்க அம்மாநில அரசுகள் அனுமதி அளித்தாலும், செம்மொழித் தமிழுக்கென ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் இயங்கிவரும்பட்சத்தில் அதனை மைசூரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கத் தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு தகுதிமிக்க நிரந்தரப் பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கான அனைத்து அழுத்தங்களையும் மத்திய பாஜக அரசிற்குத் தமிழக அரசு கொடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா

Check Also

பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!

31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *