மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்தார். இதனால் நிருபருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று (08.11.2020) இரவு வீட்டில் இருந்த மோசஸை வீட்டுக்கு வெளியே வரவழைத்த ரவுடி கும்பல் ஒன்று, அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது.
இந்தக் கொடூரப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு நிலையின் அவலத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழகம் முழுவதும் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பவர்கள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகள் ஓங்கியுள்ளன. கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வரும் சூழலில் கஞ்சா விற்பனை குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
அநீதிக்கு எதிராக தொடர்ந்து செய்தியாளராகப் பணியாற்றி வந்த மோசஸின் குரல்வலை இன்று நசுக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்புச்சட்டத்தின் மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் நடத்தப்பட்ட அப்பட்டமான படுகொலை. பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி நவமணியை போலீஸார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற சமூக விரோதக் கும்பல்களை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
சமுக விரோதக் கும்பலின் கொலைவெறிக்குப் பலியான நிருபர் மோசஸ் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இப்படிக்கு
(எம்.எச்.ஜவாஹிருல்லா)
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி