கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வசித்து வந்த செல்வமுருகன் என்பவர் தனது வியாபாரம் சம்பந்தமாக அக்டோபர் 28 அன்று வடலூர் சென்றுள்ளார். வியாபாரத்திற்குச் சென்ற செல்வமுருகன் பல மணி நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, நெய்வேலி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.
மறுதினம் காவலர்கள் செல்வ முருகனின் மனைவியைத் தொடர்பு கொண்டு, இந்திரா நகர் பகுதிக்கு அழைத்து “உன் கணவர் செல்வமுருகன் மீது திருட்டு வழக்கு போடப் போகின்றோம்; 10 பவுன் செயின் கொடுத்துவிட்டால், வழக்குப் பதியாமல் விட்டு விடுகின்றோம்” என்று மிரட்டி, அவரை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்,
அக்டோபர் 30 அன்று நெய்வேலி காவல்நிலையத்தில் செல்வ முருகனைப் பார்க்க சென்ற அவரது மனைவியிடம் காவல்துறையினர் தன்னை அடித்து சித்தரவதை செய்வதாக கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 4 அன்று இரவு செல்வமுருகன் விருத்தாசலம் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி, அங்கே சென்று அவரைப் பார்க்குமாறு காவல்துறையிலிருந்து செல்வமுருகன் மனைவி பிரேமவிற்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது, இதனையடுத்து பிரேமா அங்கே சென்றபோது, செல்வமுருகன் இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செல்வமுருகன், காவலர்கள் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக தெரிவித்திருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்நிலையத்தில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மேற்கொள்ளவும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா