Breaking News

இலங்கை அரசைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களை எரிக்கும்  இலங்கை அரசின் கொள்கையைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தனது உரையில் குறிப்பிட்டதாவது:

அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களின்  உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு பதிலாக எரிக்கப்படுகின்றன என்பதை அறிந்து தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களாகிய நாங்கள் பெரிதும் மனஉளைச்சல் மற்றும் மன வருத்தத்திற்கும் உள்ளாகியிருக்கிறோம்.

சர்வதேச சமூகம் முஸ்லிம்களின் உரிமைகளை மதித்து அங்கீகரித்து கொரோனாவினால் உயிர் இழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தடை எதுவும் விதிக்காத நிலையில் இலங்கையில் மட்டும் கொரோனாவிற்கு பலியாகும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற இஸ்லாத்தின் கோட்பாடு மீறப்படுவது விசித்திரமாக உள்ளது. இலங்கை அரசின் இனவெறியுணர்வை இது வெளிப்படுத்துகின்றது.

கொரோனா தொற்றினால் இறப்போரின் உடல்களை அடக்கம் செய்வதினால் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்று தெளிவாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.  இறந்தவரின் நம்பிக்கையின் அடிப்படையில் இறுதிச் சடங்குகள் நடத்துவதற்கும் அனுமதி அளித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற முஸ்லிம், கிறிஸ்த்தவ மற்றும் யூத மதத்தவர்களின் உரிமை கண்ணியத்துடன் மதிக்கப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.கொரோனா தொற்றை விட மிக மோசமான பாதிப்புகளை இறந்த பிறகும் ஏற்படுத்தும் எபோலா தொற்றினால் இறந்தோரை அடக்கம் செய்ய உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அமெரிக்கா, பிரட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 180 நாடுகள் கொரோனாவினால் இறந்தவர் குடும்பத்தினரின் விருப்பத்திற்கேற்ப நல்லடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ தெளிவான வழிகாட்டுதல்களை அளித்துள்ளன. கொரோனாவினால் இறப்போரின் உடலை தகனம் செய்தே ஆக வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எவ்வித அறிவுறுத்தலும் அளிக்காத நிலையில் இலங்கை மட்டும் ஏன் இந்த கெடும் பாவச் செயலில் ஈடுபட வேண்டும்.

தங்கள் மத பாரம்பரிய நடைமுறைக்கு விரோதமாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களின் உடல்களை எரிப்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICPPR) 18 மற்றும் 27ம் பிரிவிற்கு எதிரானதாக அமைந்துள்ளது.

2 கோடியே 90 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இலங்கையில் 90 விழுக்காடு சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இதில் வெறும் 9% விழுக்காடு மட்டுமே முஸ்லிம்கள். இலங்கையில் மொத்தம் கொரோனாவினால் உயிர் இழந்த 24 நபர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.  இதில் வேடிக்கை என்ன வென்றால் வெறும் 9% வீதம் மட்டுமே  வாழகூடிய முஸ்லிம்களின் மரண எண்ணிக்கை 13 ஆகும்.  உடல் எரிப்பிற்குப் பிறகு இறந்த முஸ்லிம் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவு வந்த நிலையும் உள்ளது.

இலங்கை அரசு உடனடியாக கொரோனாவினால் உயிர்இழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களின்  உடல்களை எரிக்கும் நடைமுறையைக் கைவிட்டு அத்தகைய உடல்களை நல்லடக்கம்  செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம். அனிபா, மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா, மமக இளைஞர் அணி செயலாளர் ஷேக் முஹம்மது அலி, மமக தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாதிக் பாஷா, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம், மாவட்டச் செயலாளர் தாஹா நவீன், பொருளாளர் முஹம்மது அலி, தென் சென்னை மாவட்டத் தலைவர் அபுபக்கர் கோரி, வடசென்னை மாவட்டத் தலைவர் நசுருதீன் உள்ளிட்ட ஏராளமான தமுமுக&மமக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

தமுமுகவின் கோரிக்கை மனுவை இலங்கை அரசிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இவண்
தமுமுக தலைமையகம்

 

Check Also

பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!

31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *