Breaking News

காந்தியடிகளின் லட்சியத்தில் பிரதமர் மோடிக்கு உண்மையில் பற்று இருந்தால் ஆதித்யநாத்தை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் ராகுல் காந்தி மீதான தாக்குதல் பாஜக ஆளும் உபியில் காட்டாச்சி நடப்பதற்கு எடுத்துக் காட்டு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதசேத்தில் உள்ள ஹர்தாஸ் மாவட்டத்தில் 19வயது தலித் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி அவரது முதுகுதண்டு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு குற்றுயிரும் குலைவுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிகழ்வு மிகப் பெரும் பேரதிர்ச்சியை அளித்தது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மரணமடைந்த அந்த பெண்ணின் சடலத்தை அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் அவரது குடும்பத்தினரையும் பங்கு கொள்ள தடை செய்த சட்டத்திற்கு முரணாக இரவில் தகனம் செய்திருக்கிறார்கள் உ.பி. காவல்துறையினர்.

மனிதநேயம் கொண்ட எவரையும் துயரத்தில் வீழ்த்தும் இந்த கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் அப்பெண்ணின் பெற்றோரை காண டெல்லியிலிருந்து சென்ற போது அவர்களை நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தியதுடன் தடியடி நடத்தி ராகுல் காந்தியை கீழே தள்ளிவிட்ட கொடுமை பாஜகவினர் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

உபியில் ஶ்ரீராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. ராமயணத்தை எழுதிய வால்மீகியின் சமூகத்தை சேர்ந்த தனது பெயருடன் வால்மீகியின் பெயரையும் இணைத்துக் கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இவர்கள் ராமர் மீது கொண்டுள்ள பற்று போலியானது என்பதற்கும் சான்றாக அமைந்துள்ளது.

ராகுல் காந்தியும் பிரியங்காவும் புலாகிரி என்ற படுகொலையுண்ட அப்பெண்ணின் கிராமத்தை நோக்கி சென்றது கோவிட் கால தடைகளை மீறிய செயல் என உ.பி. காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்காக அத்துமீறிய கைதை அவர்கள் செய்துள்ளார்கள். இது உண்மையெனில் ஆகஸ்ட் 5 அன்று அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் பிரதமரும், உ.பி. முதல்வரும், கோவிட் தொற்றுக்குள்ளான கோவிலின் தலைமை பூசாரியுடனும் ஆயிரக்கணக்கான மக்களுடன் பங்கு கொண்ட போது சிவப்பு கம்பளம் விரித்த உ.பி. காவல்துறையினர் ஒரு தலித் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நிலையில் தடியடி நடத்தி கீழே தள்ளி கைது செய்திருப்பது யோகி ஆதித்யநாத் நடத்துவது ஒரு அயோக்கிய காட்டாச்சி என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது..

நமது எல்லையில் வாலாட்டும் சீனாவிடம் காட்டாத பலப்பிரயோகத்தை ஒரு பொறுப்பான எதிர்கட்சி தலைவர் மீது ஆளும் பாஜக காவல்துறையினர் காட்டியிருப்பது பாஜகவினரின் காட்டாட்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

பேட்டி பச்சோ பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்ற பாஜகவின் முழக்கம் வெறும் வெற்று வார்த்தை என்பது பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகள் எடுத்து காட்டுகின்றன.

குறிப்பாக ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உ.பி மாநிலம் பெண்கள் குறிப்பாக தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறையில் முதன்மையான இடத்தில் இருப்பதை தேசிய குற்றப்பதிவு நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு பாலியல் வன்முறைக்கு பிறகு பாஜக ஆளும் உபி காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம் தனி ரகமாகும். பாலியல் வன்முறைக்கு இலக்காகும் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படலாம். அல்லது அப்பெண்ணையும் அவரது வழக்கறிஞரையும் ஏற்றி செல்லும் மகிழுந்து மீது எண் மறைக்கப்பட்ட சுமையூந்து மோதி அதில் பயணம் செய்த அப்பெண்ணின் இரு உறவினர்கள் உயிரிழக்கலாம் –இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் குல்திப் சிங் செங்கார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி காந்தியடிகளின் வாழ்விலிருந்தும் சிந்தனைகளிலிருந்து கற்பதற்கு ஏராளமாக இருக்கின்றது. வளமான இரக்கமனமுள்ள இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நமக்கு வழிகாட்டுதலாக அமையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவினர் காந்தியடிகளின் லட்சியங்களை வழிகாட்டுதல்களாக ஏற்றிருந்தால் ஹத்ராஸ்கள் நடைபெற்றிருக்காது.

காந்தியடிகளின் லட்சியத்தில் பிரதமருக்கு உண்மையில் நம்பிக்கை இருந்தால் உடனடியாக உபி முதலமைச்சர் ஆதித்யநாத்தை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தனது வார்த்தைகளை மெய்ப்பிக்கட்டும்.

இப்படிக்கு

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Check Also

பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!

31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *