Breaking News

பாபர் மசூதி தீர்ப்பு: “நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி” -ஜவாஹிருல்லா

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 28 ஆண்டுகள் கழித்து இன்று சிபிஐ நீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக கருதுகிறோம் என தெரித்துள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா.

இந்த வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்து அளிக்கப்பட்ட சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு அத்வானி தலைமையில் பல ரத யாத்திரைகள் நடத்தப்பட்டன. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது எல்லாம் அப்போது செய்தித்தாள்களில் தெளிவாக வந்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

இடிப்பு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் கமிஷன் 8 கோடி ரூபாய் செலவில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் என்ன நடந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது.

“அந்த அறிக்கையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கர சேவகர்களிடம் கீழே இறங்கிவரும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், கட்டடத்தை இடிக்க வேண்டாம் என்றோ, அல்லது சேதப்படுத்த வேண்டாம் என்றோ அவர்கள் கூறவில்லை. கர சேவகர்கள் மசூதியை இடிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தலைவர்களின் விருப்பமாக இருந்தது என லிபரான் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக” ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

அன்று இருந்த ஊடகங்கள் எல்லாம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை பதிவு செய்தன.

உமா பாரதி போன்றோர் எல்லாம், கர சேவகர்களிடம் கட்டடத்தை இடிக்க சொன்னதெல்லாம் ஊடகங்களில் பதிவாகியிருக்கிறது.

இப்போது “பாபர் மசூதியை இடிக்க யாரும் சதித்திட்டம் தீட்டவில்லை, யாரும் இடிக்கவில்லை என்கிறார்கள். அது என்ன கடவுள் செயலா, இல்லை இடி விழுந்து தரைமட்டமாகிவிட்டதா?” என்று ஜவாஹிருல்லா கேள்வி எழுப்புகிறார்.

எல்.கே.அத்வானி (இடது) முன்னெடுத்த ராமஜென்ம பூமி இயக்கம் தேசிய அளவில் பாஜகவுக்கு அரசியல் பலன்களைத் தந்தது.

இது கேலிக்கூத்தான தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் பாபர் மசூதியை சமூக விரோதிகள்தான் இடித்தார்கள் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது யார் என்பது குறித்து பேசவில்லை. அவர்கள் எல்லாம் என்ன தானாக அங்கு வந்தார்களா? அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு கொடுக்கவில்லையா, விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுக்கவில்லையா? இடித்தவர்கள் சமூக விரோதிகள் என்றால், அதை செய்யச் சொன்னவர்கள் யார்? எனவும் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்புகிறார்.

‘சிபிஐ கடமையை சரியாக செய்ய தவறிவிட்டது’

பாஜக தலைவர்கள் எல்லாம் இதில் சம்பத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஒலிநாடாக்கள் எல்லாம் தெளிவாக இல்லை என்று சொல்கிறார்கள். இந்த வழக்கில் சிபிஐ தன் கடமையை செய்ய தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும் என ஜவஹிருல்லா தெரிவித்தார்.

சில உள்ளூர் காவல்நிலையங்களில் இருக்கக்கூடிய நீதியையும் நியாயத்தையும் கூட, இனி சிபிஐ-யிடம் மக்கள் எதிர்ப்பார்க்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

‘நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லை’

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் கூறுகையில், இன்று தீர்ப்பு வரும் முன்னரே இந்த தீர்ப்புதான் வரும் என்று அனுமானிக்க முடிந்தது என்றார்.

இதனை நீதி, நியாயம், தர்மம் என்ற வரையறைக்கு எல்லாம் தாண்டிய தீர்ப்பாகவே மக்கள் கருதுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

“பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் இவர்கள்தான், குற்றவாளிகள் இவர்கள்தான், அவர்கள் திட்டமிட்டு செய்த சதிச்செயல் இது என ஓய்வுபெற்ற நீதிபதி லிபரஹான் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி ஏற்கனவே அறிக்கை சமர்பித்து இருந்தது.

பாபர் மசூதி தீர்ப்பு: "நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி"

குற்றஞ்சாட்டப்பட்ட 47 தலைவர்களும், ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின்போது அங்கு இருந்திருக்கிறார்கள் என லிபரஹான் கமிஷன் அறிக்கை கூறுகிறது

தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதை எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

“இது முன்கூட்டியே தீட்டப்பட்ட சதித்திட்டம் இல்லை என்று இன்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதியை அத்துமீறி சென்று சமூக விரோதிகள், குற்றவாளிகள் இடித்திருக்கிறார்கள் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது திட்டமிட்டு செய்தால் குற்றம், திட்டமிடாமல் செய்தால் குற்றம் இல்லை என்பது போன்ற வேடிக்கையான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.

மேலும் திட்டமிடாமலா குற்றஞ்சாட்டப்பட்ட இந்த 47 பேரும் ஒரே நாளில் அங்கு சென்றிருப்பார்கள்?” என அப்துல் ரஹ்மான் கேள்வி எழுப்புகிறார்.

நீதிமன்ற தீர்ப்பு என்று சொன்னாலே அதற்கு என்று ஒரு தனி கண்ணியமும் தனி மரியாதையும் இருந்த ஒரு பாரம்பரியாமான மரபை தாண்டிய ஒரு அசாதாரண சூழ்நிலை நடப்பதாக நாட்டு மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு லக்னௌ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

“ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்ப்ட்ட தீர்ப்பில் கூட, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், கோயில் இருந்தது என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை, எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. அதோடு, பாபர் மசூதியை அத்துமீறி சென்று இடித்தது மிகப்பெரிய குற்றச்செயல் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுவிட்டு, அந்த இடத்தை ராமஜென்ம பூமி கமிட்டியிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்துகொண்ட போவதாகவும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-54358219

Check Also

முதலமைச்சர் பழனிச்சாமி தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் மரணித்தார்கள். இன்று அக்டோபர் 21,2020 தமிழ்நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *