Breaking News

2019ல் காவலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2019ல் காவலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த 2019 மார்ச் மாதம் ஆள்தேர்வு என அறிவிப்பு செய்யப்பட்டு உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 8773 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தவிர மேலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனைத்து தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களின் பெயர்களும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் 8773 பணியிடங்கள் மட்டுமே இருந்த காரணத்தால் தரவரிசையில் இடம்பெற்றிருந்த மீதமுள்ளவர்களுக்குக் காவலர் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை.

காவல்துறை பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும்போது அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்முதல், ஆள்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரை ஏற்படும் புதிய காலி பணியிடங்களை கணக்கில் கொண்டு மொத்த காலியிடங்களில் சேர்க்கப்பட்டு, கூடுதல் எண்ணிக்கையில் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்துவது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், 2019 மார்ச் முதல் 2020 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட புதிய காலியிடங்கள் ஏற்கனவே இருந்த காலியிடங்களில் சேர்க்கப்படவில்லை. அவ்வாறு புதிதாக காலி பணியிடங்களைச் சேர்த்திருந்தால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் சேர்க்கப்பட்டு தரவரிசையில் தேர்வான அனைவருக்கும் பணியிடம் கிடைத்திருக்கும்.

தமிழகக் காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அது விரைவில் நிரப்பப்படும் எனவும் மாண்புமிகு அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அதேபோல் கொரோனா மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு போன்றவற்றை நிர்வகிக்க தமிழகத்திற்கு கூடுதல் காவலர்கள் தேவை.

மேலும் கொரோனா காலத்தில் மீண்டும் தேர்வு வைத்து 10 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்வது நோய்த்தொற்றை அதிகரிக்கும். எனவே, பிப்ரவரி மாதம் தரவரிசை பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு பணியிடம் இல்லாத காரணத்தால் வாய்ப்பை இழந்த இளைஞர்களை காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் எனத் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *