Breaking News

சவூதி்கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தாயகம் திரும்பும் நிகழ்ச்சி

சவூதி கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகளான சகோ. அபிராமம் அப்துல் காதர் (முன்னாள் மண்டலத் தலைவர் & சவூதி மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் சகோ. நெல்லை இப்ராஹிம் ஷா (மண்டலப் பொருளாளர் – பொறுப்பு) ஆகிய இரண்டு ஆளுமைகளும் பொறியாளர்களாக 30 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக தங்களது நிறுவனங்களில் பணி செய்து கொண்டே தமாம் தஃவா கமிட்டியோடு இணைந்து இங்குள்ள தமிழ் மக்களுக்கு தூய இஸ்லாத்தினை எத்தி வைக்கும் அரும்பணியை சிரமேற்கொண்டு சிறப்பாக செய்தனர்.

அதேபோல், கிழக்கு மண்டலத்தில் தமுமுகவை முதன்முதலாக கட்டமைப்பதிலிருந்து 25 வருடங்கள் கடந்தும் இன்றுவரை அதன் பல்வேறு கட்ட தொடர் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினர்.

சகோ. அப்துல் காதர் அவர்கள் மண்டலத் தலைவராக நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் ஊடகம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னெடுத்துச் செயல்பட்டார். ‘மக்கள் உரிமை’ பத்திரிகையின் தொடர் வளர்ச்சிக்கு அவரது பங்கு இன்றியமையாதது.

இந்திய அரசியல் நகர்வுகள் பற்றிய தெளிவான புரிதலுடனும், தமுமுக வரலாற்றுப் பதிவுகளின் புள்ளி விவரங்களுடனும், தனது உரைகளாலும், எழுத்துக்களாலும் உரமேற்றியவர்.

மேலும், சவூதி அரேபியாவின் அனைத்து மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளராக மாநில தலைமையின் கட்டளைகளை மண்டலத் தலைவர்களுடன் கலந்து ஒருங்கிணைத்து முக்கிய முடிவுகள் எடுப்பதிலும், கருத்தொற்றுமையை உருவாக்குவதிலும் அருமையாக கடமையாற்றினார்.

பல வருடங்கள் மண்டலப் பொருளாளராக பணியாற்றிய சகோ. நஸ்ருத்தீன் ஸாலிஹ் அவர்கள் சென்ற வருடம் தாயகம் திரும்பிய போது, அவர் வகித்த முக்கியப் பொறுப்பை தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது ஏற்றுக்கொண்டு சிறப்பாக நிர்வகித்தவர் சகோ. இப்ராஹிம் ஷா அவர்கள்.

நேற்று தமாமில் கிழக்கு மண்டல நிர்வாகக் குழுவின் சார்பாக நடந்த எளிமையான நிகழ்ச்சியில் இருவரும் கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் மண்டல நிர்வாகிகள் சமுதாயப் பணியில் இரு சகோதரர்களுடனான தங்களது பல்லாண்டு கால நட்புறவு குறித்து கண்கலங்க நினைவு கூர்ந்தனர்.

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் அவர்களது அனைத்து நற்பணிகளையும் அங்கீகரித்து ஈருலக வாழ்வில் வெற்றிகளை தர துஆ செய்கிறோம்.

அப்துல் அலீம் சித்தீக்
தலைவர்- கிழக்கு மண்டலம்
சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *