Breaking News

கேரளாவில் கனமழையால் 5 பேர் மரணம்: நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மமக வலியுறுத்தல்

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மரணம்:
நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 80 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும், இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுபோன்ற விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

கேரளா மாநிலத்தில் மூணாறு மலைப் பகுதியை போன்று தமிழகத்தில் உள்ள நீலகிரி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதும், 50க்கு மேற்பட்ட இடங்களில், 400க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. குறிப்பாக, ஊட்டி – பைக்காரா சாலை, மஞ்சூர் – கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர் பவனி, எமரால்டு , அண்ணா நகர் சாலைகளில் வீசிய பலத்த காற்றுக்கு அடுத்தடுத்து மரங்கள் விழுந்து வருகிறது.

நீலகிரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 250க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் மீட்கபட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நான்கு நாட்களாக கூடலூர், பந்தலூர் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சாரம், குடிநீர் வநியோகமின்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பொக்லைன் உதவியுடன் உடனுக்குடன் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நாளை 8ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் மலைச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்களை பாதுகாப்பாக மீட்க வனத்துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறையினரை தயார் நிலையில் இருக்கவும், மலைப் பிரதேசம் என்பதால் தேவைப்படும்பட்சத்தில் விமானப் படையை பயன்படுத்தி மீட்டுப் பணிகளை முடக்கிவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 

Check Also

தமுமுக வெள்ளி விழா மாநாடு வாழ்த்துரை – பி.எம்.பஷீர் அஹமத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *