Breaking News

மனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்

கொரோனா பலருக்கு பலவித பாடங்களை கற்று தந்துள்ளது. பல அனுபவங்களையும் தான். பல மனித நேயங்கள் வெளி வந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி என்ற எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்தாக வேண்டும்.


நான் எனது குடும்பத்தாருடன் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறேன். என் தங்கை நூர்ஜகான், அவரது கணவர் நாசருடன், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பெரிய பள்ளிவாசல் அருகில், இரண்டாவது தளத்தில் வசிக்கிறார்கள். மகன், மருமகள், பிள்ளைகள் ஏற்கனவே வெளியூர் போய்விட்டார்கள். இந்த நிலையில், ஜூன் மாதம், 6ம் தேதி, என் மச்சானுக்கு வயிறு சரியில்லை என்று ஆரம்பித்து, கடகடவென்று நாட்களும் சென்றது, சரசரவென்று உடல் நலம் மோசமானது. இவ்வளவுக்கும் மருத்துவ ஆலோசனையில் தான் மருத்துவம் பார்க்கப்பட்டது. இதற்குமேல் வீட்டில் இருந்து பயனில்லை என்று மருத்துவமனை கொண்டு போக வேண்டும் என்ற அவசரநிலை 11ம்தேதி இரவு ஏற்பட்டது. எப்படி போவது?

ஆம்புலன்சுடன் வந்த தமுமுக தொண்டர்

நினைவுக்கு வந்தது, தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் பேராசிரியர் ஹாஜாகனியும் தான். அவர்கள் பகுதி நிர்வாகி பொறியாளர் அப்துல் சலாம் எண்ணைக் கொடுக்க, அவர் உடனடியாக காதர் என்பவர் எண்ணை கொடுத்து அவரிடம் பேசிவிட்டதாகவும், ஆம்புலன்சுடன் வருவார் என்றும், உதவுக்கு திருவல்லிகேணி தோழர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் சொன்னார். காதரை தொடர்பு கொள்ள, அவருடைய மகன் அசாருதீன் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி  அட்ரஸ், தொலைபேசி என்ன?

அடுத்த அரைமணிநேரத்தில் ஆம்புலன்சுடன் அசாருதீன் அங்கு சென்றுவிட்டார். என் தங்கை மகனுடைய நண்பன் நபீஸ் உதவியுடன் என் மச்சான் அப்போலோ அழைத்து செல்லப்பட்டார். என் தங்கையுடன் நானோ என் பிள்ளைகளோ போக இயலவில்லை. ஆனாலும் அசாருதீனும், நபீசும் இருந்தார்கள். அப்போலோவில் ஏற்கனவே சொல்லி வைத்து நாங்கள் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததால், உடனடியாக அட்மிஷன் கிடைத்தது. இரவு ஒரு மணிக்கு என் தங்கையை மீண்டும் வந்து வீட்டில் விட்டு விட்டு அசாருதீன் எனக்கு தகவல் கொடுத்து விட்டுதான் சென்றார். சகோதர்ர் அப்துல் சலாமும் தொடந்து தொடர்பில் இருந்தார்.

மறுநாள் என் 64 வயதான என் மச்சானுக்கு கோவிட்19 பாசிடிவ் என்று வந்தது. தீவிர மருத்துவம் பார்க்கப்பட்டது. என் தங்கையை பரிசோதிக்க 58 வயதான அவருக்கும் பாசிடிவ். ஆனால் அறிகுறி இல்லை. அப்போலோவில் அவரையும் பரிசோதிக்க, டாக்டர் செந்தூர் நம்பி, என் தங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை, நோய் அறிகுறி வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

அசாருதீனையும் நபீஸையும் அழைத்து, விவரம் கூறி அவர்களையும் பரிசோதிக்கலாம் வாருங்கள் என்று அழைக்க, அவர்கள் ஜாக்ரதையாக இருந்ததாகவும், இடைவெளி பேணி, முகத்திரை அணிந்திருந்ததாகவும், நோய்குறிகள் இருந்தால் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதாகவும் கூறிவிட்டார்கள்.

மாநகராட்சி வீட்டை முன்புறம் அடைத்து விட்டார்கள். உரிமையாளர் ஜான் முகமது, என்னிடம், கவலைப்படாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆறுதல் கூறினார். அவர் மகன் என் தங்கை தேவைகளை பார்த்துக்கொண்டார்.

எங்கள் வயது உடல் நிலை காரணமாக நானோ அல்லது எனது மனைவியோ, என் தங்கையுடன் போய் இருக்க இயலவில்லை என்றாலும், இறைநாட்டம், இறைநம்பிக்கை, உறவினர், தோழர்கள் பிரார்த்தனை தான் எங்களுக்கு பக்கபலமாக இருந்தது .

தங்கையின் தைரியம்

கொரோனாவுடன் தனியாக வாழ்வது எப்படி என்று என் தங்கையிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். தைரியசாலி. யாரையும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள். இறைவா! காப்பாற்று என்று பிரார்த்தனை மட்டும்தான் எங்களால் இயன்றது. அப்பாடா! இறையருளால், சென்ற வெள்ளிக்கிழமை, 19ம் தேதி என் மச்சான் நலமடைந்து வீடு திரும்பினார். என் தங்கை இறை அருளால், எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார். நபீஸும் நலம். அசாருதீனும் நலம்.

வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு

நான் அசாருதீனுக்கு ஒரு குறிப்பு வாட்ஸ்அப்ல் அனுப்பினேன்.

“அப்போலோவில் நீங்கள் கொண்டுபோய் சேர்த்த என் மச்சான் நலமடைந்து வீடு திரும்பி விட்டார். ( Triplicane Mathina illam ) என் தங்கையும் வீட்டில் நலமாக உள்ளார். உங்கள் உதவிக்கு நன்றி. அல்லாஹ் உங்களுக்கு எல்லாவித அருளையும் வழங்குவானாக. தங்கள் பேங்க் அக்கவுன்ட் விவரம் அனுப்பவும். ஏன் வங்கி விவரம் கேட்டேன் என்பது உங்களுக்கு புரியும்.

ஆனால் அடுத்த நிமிடம் அவர் பதிவு செய்து அனுப்பிய குரல் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

அது இதுதான்” அஸ்ஸலாமு அலைக்கும்! அல்ஹம்துலில்லாஹ்! உங்கள் மச்சான் இப்போது பிறந்த குழந்தை மாதிரி! அவரிடம் சொல்லி எங்களுக்காகவும், எல்லா உம்மத்துக்காகவும், உலக மக்களுக்காகவும் துவா செய்ய சொல்லுங்கள், அதுவே எனக்கு போதும்”

வங்கி விவரம் வரவில்லை.

தைர்யம் என்றால் என்னவென்று கொரோனாவுடன் தனியாக இருந்த என் தங்கையிடம் கற்க வேண்டும்.

மனிதம் என்றால் என்ன என்று அசாருதீனும், நபீஸும், அப்துல் காதரும், அப்துல் சலாமும், ஜான் முகமதுவும், அவரது மகனும், தமுமுக தோழர்களும் உணர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.

அக்பர்அலி
மேனாள் நீதிபதி
சென்னை
26.06.2020

Check Also

கீழடியும் – சிரியா நாணயமும் ஒரு மீள் பார்வை

விகடனில் ‘6 ‘ -ம் நூற்றாண்டில் சிரியா நாணயம் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!’ – கீழடி ஆச்சர்யம்’ எனும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *