Breaking News

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என பலதரப்பு மக்களும் அரசை வலியுறுத்தி வரும் நிலையில் ஜூன் 15ஆம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது எனவும், ஜூலை 2வது வாரத்தில் பொதுத் தேர்வை நடத்த பரிசீலிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில் ஜூன் 15ல் பத்தாம் வகுப்புத் தேர்வைத் தொடங்கியே தீர்வது என அரசு முனைப்புடன் செயல்படுவது மாணவர்கள் மத்தியில் கொரோனா பரவலை அதிகரிக்கும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் சுமார் 10 லட்சம் மாணவர்களை 5 நாட்களுக்கு தேர்வு மையங்களில் கூட வைப்பது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்.

தேர்வுத்துறை இணை இயக்குனர், ஒரு உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்துவது மாணவர்களின் உயிருடன் விளையாடும் செயலாகும்.

மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான மனநிலையில் இல்லாதபோது அவர்கள் மீது இந்தத் தேர்வைத் திணிப்பது தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும். அவசர கதியிலும், ஆபத்தான கொரோனா தொற்றிலும் இந்தத் தேர்வை நடத்தினால் மாணவர்களின் உடல்நிலையும், மனநிலையும் தேவையற்ற பிரச்னையில் அவர்களைத் தள்ளிவிடும்.

எனவே, தமிழக அரசு இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என மனிதநேய மககள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய கொளத்தூர் தமுமுக

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக முழு ஊரடங்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் தண்ணீர்,டீ,பிஸ்கட் மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *