Breaking News

கேரளாவில் யானை கொல்லப்பட்டத்தை மத மோதலாக்கும் பாஜக தலைவர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கேரள மாநில வனப்பகுதியில் பழத்தில் வெடி வைத்து ஒரு கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் யானை மரணத்தை வைத்து மத மோதல்களை உருவாக்கும் நோக்கத்தோடு பாஜக தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவது கண்டனத்திற்குரியது.

யானையின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, மலப்புரம் மாவட்டம் இந்தியாவிலேயே அதிக வன்முறைகள் நடக்கும் மாவட்டம் என்றும், மூன்று நாட்களுக்கு ஒரு யானை அப்பகுதி மக்களால் கொல்லப்படுகிறது என்றும், மலப்புரம் சாலைகளில் விஷத்தை வைத்து 300 முதல் 400 பறவைகள் மற்றும் நாய்கள் ஒரே நேரத்தில் கொல்லப்படுகிறது என தனது விஷமக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமானோர் வாழும் மாவட்டமான மலப்புரம் மாவட்டத்தை தொடர்புபடுத்தி தெரிவித்துள்ள மேனகா காந்தியின் இதுபோன்ற மதவெறுப்புணர்வு கருத்து வன்மையாகக் கண்டனத்திற்குரியது. இறந்த யானை காயத்துடன் ஆற்றிலிருந்த இடம் மலப்புரம் மற்றும் பாலக்காடு எல்லை. யானை இருந்த இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாவட்ட மக்களை ஈவிரக்கமற்ற மனிதர்களாகச் சித்தரித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

யானை மரணம் குறித்து அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் எந்த ஆதாரமுமின்றி மலப்புரம் முஸ்லிம் மக்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலப்புரம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *