Breaking News

மானுடம் வென்றிட மனங்கள் இணையட்டும்

இஸ்லாமிய மார்க்கத்தின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈகைப் பெருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங் கனிந்த நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அதிகாலை முதல் மாலை வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல், உண்ணாமல், உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் பெற்றுள்ள மார்க்கப் பயிற்சியை ஆண்டு முழுவதும் மனதிற்கொண்டு அறநெறிப்படி வாழ வேண்டும் என்பதே இறைவனுக்கு விருப்பமான வாழ்வாகும்.

இஸ்லாமிய இறை வணக்கம் என்பது தொழுகை, நோன்பு இவற்றோடு மட்டும் நின்று விடுவதல்ல. பிற மனிதர்களின் நலன் காக்கவும், அவர்களின் சிரமங்களைப் போக்கவும் பாடுபடுவது கூட இஸ்லாமின் பார்வையில் இறைவணக்கமாகவே உள்ளது.

கொரோனா கிருமியில் உலகமே நிலைகுலைந்து போயுள்ள சூழலில், இஸ்லாம் வலியுறுத்தும் ஈகையென்னும் அருட்குணம் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் உதவியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சிக்கலில் சிக்கிய அனைத்து தரப்பு மக்களின் துயர்களைத் துடைக்க, முஸ்லிம்கள் உத்வேகத்தோடு முன்னின்று பணியாற்றியதற்கு, இஸ்லாம் மார்க்கம் தந்துள்ள வழிகாட்டுதல் முக்கிய காரணம் ஆகும்.

ஏழை, எளியவர்களும், புலம்பெயர்த் தொழிலாளிகளும், சமூகத்தின் அடித்தட்டு நிலையில் உள்ள அனைத்துப் பிரிவினரும் கடுமையான வாழ்வியல் நெருக்கடியைச் சந்தித்துள்ள சூழலில், இஸ்லாம் வலியுறுத்தும் ஈகை என்ற அருட்குணம் இதற்கெல்லாம் ஒரு அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் வாழ்வில் ஈகையை முன்னிலும் அதிகமாகக் கடைப்பிடித்து, இன்னலுற்ற மக்களின் மீட்சிக்குப் பணியாற்ற வேண்டும். கொரோனா முடக்கம் ஏற்படுத்தியுள்ள மிகப் பெரும் பொருளாதார சரிவு அனைத்து மக்களுக்கும் மிகப் பெரும் வாழ்வியல் துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத நமது தொப்புள்கொடி உறவுகளின் நலன் பேணுவதிலும் முன்னின்று பணியாற்றி மனிதநேயமிக்க சமூகத்தைப் பேணிக்காத்துப் பணியாற்ற வேண்டும் என்பதையும் ஈகைப் பெருநாளின் செய்தியாகச் சமர்ப்பிக்கிறேன்.

பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஈகைத் திருநாளில் உலகமும் நமது நாடும் கொரோனவிலிருந்து விடுபடவும் அது ஏற்படுத்திய தீய விளைவுகள் களைவதற்கும், அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் ஏற்படவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் அகங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Check Also

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *