Breaking News

என்.பி.ஆர். குறித்து சட்டபேரவையில் அறிவிக்காமல் வெளியில் அறிவித்தது ஏன்?

என்.பி.ஆர். குறித்து சட்டபேரவையில் அறிவிக்காமல் வெளியில் அறிவித்தது ஏன்?

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழக வருவாய் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் என்பிஆர் என்னும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் ஒரு அங்கமாக வீடுகள் கணக்கெடுப்பு சென்சஸ் சட்டத்தின் அடிப்படையில் நடத்துவதற்கான அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும் என்பிஆர் தொடர்பான அறிவிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது தமிழகத்தில் நடைபெற்று வரும் இடைவிடாத போராட்டங்களின் தாக்கத்தினாலும், எதிர்கட்சிகளின் அழுத்தங்களினாலும் வெளியிடப்பட்ட அறிவிப்பாக கருதுகிறோம். இருப்பினும் அவர் தனது பேட்டியில் கூறிய சில தகவல்கள் மக்களிடையே உள்ள சில அச்சங்களைப் போக்கும் வகையில் அமையவில்லை.

என்பிஆர் 2020 படிவத்தில் உள்ள மூன்று கேள்விகளுக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இதுவரை விளக்கம் வரவில்லை. அது வரை என்பிஆரை நிறுத்தி வைத்துள்ளோம் என்று கூறும் அமைச்சர் என்பிஆருக்கும் என்ஆர்சி என்னும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் உள்ள இணைப்பை தனது பேட்டியில் மறைத்தது ஏன்?

என்பிஆர் நடத்தும் போது எந்தவொரு ஆவணமும் கேட்க மாட்டார்கள் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2018&-19க்கான ஆண்டு அறிக்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த 15 வது அத்தியாயத்தில் மக்கள் தொகை பதிவாளரே குடிமக்கள் பதிவேட்டின் பதிவாளராக இருப்பார் என்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பல்வேறு மத்திய உள்துறை அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிவேட்டில் என்பிஆரை வைத்து தான் என்ஆர்சி தயாரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இப்போது என்பிஆர் ஆவணம் இல்லாமல் எடுக்கப்பட்ட போதினும் சாதி, மத. கட்சி பாகுபாட்டின் காரணமாக என்பிஆரை வைத்து உள்ளுர் பதிவாளர் தயாரிக்கும் குடிமக்கள் பதிவேட்டில் சந்தேகத்திற்குரிய குடிமக்களாக அனைத்து தரப்பினரும் மாறும் அபாயம் உள்ளது. எனவே என்ஆர்சி குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் தெரிவிக்காதது ஏன்?

என்பிஆர் நடைமுறைக்கு வந்ததற்கு காங்கிரஸ் மற்றும் திமுக தான் காரணம் என்று குற்றஞ்சாட்டும் அமைச்சர் உதயகுமார், 2010ல் என்பிஆர் நடைமுறைப்படுத்தப்பட்ட போது சிறுபான்மை மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சிஏஏ சட்டம் இல்லை என்பதை வசதியாக மறைத்து எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது ஏன்?

மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்தை எதிர்த்து மாநில அரசு தீர்மானம் நிறைவேற்ற இயலாது என்று சொல்லும் அமைச்சர் உதயகுமார், நாட்டின் பாதி மக்கள் தொகையை பிரதிநிதித்துவப்படும் மாநில அரசுகள் தமது சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதையும் மறைக்கிறார். மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது நியாயமான நடவடிக்கை தான். மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு இணங்காமல் சிஏஏ என்பிஆர் என்ஆர்சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக நாங்களும் திராவிடக் கட்சி தான் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பை ஏன் கோட்டைவிட வேண்டும்.?

மக்களுக்கு நல்வாழ்வு திட்டங்களை வகுப்பதற்கு சென்சஸ் என்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போதுமானது என்று மிகச் சரியாக அமைச்சர் உதயகுமார் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆம் விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சென்சஸ் சட்டம் 1948 அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை யாரும் ஆட்சேபிக்கவில்லை. எனவே தான் குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் என்பிஆர் பயனற்றது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இந்த அடிப்படையில் என்பிஆர் தேவையற்றது என்று அறிவிக்க தமிழக அரசு தயங்குவது ஏன்?

என்பிஆர் கணக்கெடுப்பை நிறுத்தி வைத்துள்ளோம் என்ற கொள்கை அறிவிப்பை சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியிருந்தால் மக்களுக்கு தமிழக அரசின் நிலைப்பாட்டில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து உடனடியாக சட்டமன்றத்தில் தமிழக அரசு என்பிஆர் என்ஆர்சி மற்றும் சிஏஏவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் அச்சத்தைப் போக்க முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *