Breaking News

நற்றமிழ் இமயம் சரிந்ததே..! நட்பின் இலக்கணம் இறந்ததே..!

நற்றமிழ் இமயம் சரிந்ததே..!
நட்பின் இலக்கணம் இறந்ததே..!

திமுக பொதுச் செயலாளர் பேரா.க. அன்பழகன் மறைவுக்கு
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:

தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக இளம்பருவம் முதல் கலைஞரோடு கரங்கோத்துக் களமாடி வந்த இனமான பேராசிரியர் திமுகவின் பொதுச் செயலாளர் க. அன்பழகனார் மறைந்தார் என்ற செய்தி எமது இதயத்தில் இடியாய் இறங்கியது.

கல்வியாளராக, களப் போராளியாக, இலக்கிய வாதியாக, சொற்பொழிவாளராக என ஏராளமான ஆளுமைத் திறன்களைப் பெற்றிருந்த பேரா. அன்பழகன், ஓர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் இலக்கணமாக இருந்தவர். தனது நலனை விடவும், இயக்கத்தின் நலன் பெரிது என்று வாழ்ந்து காட்டியவர்.

கலைஞரும், பேராசிரியர் க. அன்பழகனும் முதன்முதலில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டது திருவாரூர் விஜயபுரம் முஸ்லிம்கள் நடத்திய இஸ்லாமியச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் மேடையில்தான் என்பதைக் கலைஞர் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.

அன்றைய சிறப்புரையாளர் பேரறிஞர் அண்ணா, தான் உரையாற்றுவதற்கு முன், பேரா.க.அன்பழகனை உரையாற்ற வைத்ததை, அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் முன்னின்று பணியாற்றிய கலைஞர் கண்ணுற்று அம்மேடையிலேயே தன் பொதுவாழ்வுத் தோழமையாகப் பேராசிரியரின் கரம் பற்றியுள்ளார்.

திமுக எத்தனையோ புயல்களை எதிர்கொண்ட போதும், மலைகுலைந்தாலும், நிலைகுலையாத மாமணியாய், பேரா.க. அன்பழகன் நின்றுள்ளார். அவர் பேராசிரியர் என்று அடைமொழியில் கொண்டாடப்படுவது, பேராசிரியர்கள் அனைவருக்குமே பெருமை.

திருவாரூர் அருகே காட்டூரில் பிறந்த பேரா.க.அன்பழகன், தமிழ் மீது கொண்ட தணியாப்பற்றின் காரணமாக ராமையா என்ற தன் இயற்பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்.

தமிழினத்திற்காகத் தொண்டாற்றி மிகச் சிறந்த மாற்றங்களையும் அவர் கொண்டு வந்தார். எம் நெஞ்சமெல்லாம் நிறைந்த பேரா.க.அன்பழகன் கடந்த 20 ஆண்டுகளாக என்னுடன் நட்பாக இருந்து அவர் என்மீது காட்டிய பரிவும், பாசமும் அளப்பரியது.

பேரா.க. அன்பழகன் மறைந்தாலும், அவரது நினைவுகள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் அன்னாரை இழந்து வாடும் திமுக என்ற மாபெரும் குடும்பத்தின் தலைவர் முதல் கடைக்கோடி தொண்டர் வரை உள்ள அனைவருக்கும் திராவிட சொந்தங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது மனங்கனிந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *