Breaking News

ஜேஎன்யூ மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஜேஎன்யூ மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது  முகமூடி அணிந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலை பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பினர் நடத்தி உள்ளனர் என ஜே.என்.யூ. மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜே.என்.யூ. மாணவர்கள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விடுதிக் கட்டண உயர்வு, தேர்வுக் கட்டண உயர்வு என புதிய கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தின் தலைவரான அய்ஷி கோஷ் மீதும் மாணவிகள் பலர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்களது மண்டை உடைந்ததோடு பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் காயமடைந்துள்ளனர்.

இதுபோன்ற கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்யாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

டெல்லி காவல்துறை இந்தத் தாக்குதலை வேடிக்கைப் பார்த்துள்ளது. காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வந்த ஆம்புலென்சுகளும் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை வேடிக்கைப் பார்த்துள்ளது.

மாணவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஸ் குமார், சமூகவிரோத சக்திகளை வளாகத்திற்குள் அனுமதித்து இந்த கொலைவெறித் தாக்குதல் நடப்பதற்கு வழிவகுத்துள்ளார். அவர் உடனடியாக துணைவேந்தர் பொறுப்பிலிருந்து நீக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைநகர் டெல்லியில், மோடி ஆட்சியின் கீழ் கும்பல் வன்முறை தலைவிரித்தாடுவது வெட்கக்கேடானதாகும். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காயமடைந்த மாணவர்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் அமைதி நிலவ மத்திய அரசு உறுதியேற்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *