Breaking News

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: தேர்தலைச் சந்திக்க அதிமுகவிற்கு இருக்கும் நடுக்கத்தையும் தயக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: 
தேர்தலைச் சந்திக்க அதிமுகவிற்கு இருக்கும் நடுக்கத்தையும் தயக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த பல மாதங்களாக பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை இன்று தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடும் என்ற  எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அமைந்துள்ளது. ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் புதுமையாக அறிவித்திருப்பது அதிமுக அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பதில் உள்ள தயக்கத்தையும் நடுக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.

உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிப்போடும் நோக்கத்திலேயே ஐந்து புதிய மாவட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது என்ற பலமான சந்தேகம் எழுகின்றது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு வரையறைகளை முறையாக அறிவித்து அதற்குரிய இட ஒதுக்கீடுகளையும் அறிவிக்காத நிலையில் புதிய மாவட்டங்களில் ஊராட்சி தேர்தல் குறித்து ஒரு குழப்பமான அறிவிப்பை தேர்தல் ஆணையம் செய்திருப்பது ஒரு ஜனநாயகப் படுகொலையாகும்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் தேர்தல் நேரடியாக நடைபெறாது என்று அறிவிப்பதில் அதிமுக அரசு காட்டிய அவசரத்தை இந்த நிலையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிவிப்பதில் ஆர்வம் காட்டாத நிலையும் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதற்கு இருக்கும் அச்சத்தை வெளிப்படுத்துகின்றது.

ஆளும் அதிமுக உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கத் தயங்கும் நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளதை விமர்சிக்க எவ்வித அருகதையும் இல்லை.
அனைத்து நிலைகளிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக சமூக நீதியைப் பேணும் வகையில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *