Breaking News

விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரி மாநிலத்தில் காமராசர் நகர் தொகுதியிலும் அக்டோபர் 21 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசிற்கு ஆதரவாகத் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் இணைந்ததும், மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தின்படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவித்துள்ளதும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை என முடிவு எடுத்தபின்பு அத்திட்டங்களுக்கு புதிய ஒப்பந்தங்களை மோடி தலைமையிலான அரசு கையெழுத்திடுவதை வேடிக்கை பார்த்து மவுனமாக இருந்து மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஆகியோர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கும், நாங்குனேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் மனிதநேய மக்கள் கட்சி களப்பணியாற்றி வெற்றிக்காகப் பாடுபடும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக நலனை காக்க மத்திய பாஜக அரசிற்கு ஆதரவாகச் செயல்படும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசிற்கு ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய வாக்காளர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் காமராசர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

தமிழக மாணவர்களுக்கும் அரசின் கொள்கைமுடிவுக்கும் எதிராக ஆளுநா் செயல்படுவதை நிறுத்த வேண்டும்

– சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) கடும் கண்டனம்..! திருவாரூா் மத்திய பல்கலைகழகத்தில் 27.5.2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *