Breaking News

பெரும்பான்மையான இந்திய மக்களின் மொழியாக இல்லாத இந்திதான் இந்தியாவின் மொழி என்ற அமித்ஷாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

பெரும்பான்மையான இந்திய மக்களின் மொழியாக இல்லாத இந்திதான் இந்தியாவின் மொழி என்ற அமித்ஷாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இந்திதான் இந்தியாவின் தாய்மொழி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

உண்மையில் இந்தி மொழி இந்தியா முழுமைக்கும் ஏற்ற மொழி இல்லை. இந்தி பேசுபவர்கள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே. மேலும் இந்தி பேசப்படும் மக்கள் என்று குறிப்பிடப்படுபவர் அனைவரும் ஒரே வகையான இந்தியைப் பேசுவது இல்லை. அரசால் திணிக்கப்படும் இந்தி என்பது வெறும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள மக்களே பேசிவருகின்றனர். குறைந்த மக்களால் பேசப்படும் ஒரு மொழி எப்படி இந்தியாவிற்கு பொது மொழியாகவும், 130 கோடி மக்களின் ஆட்சி மொழியாகவும் இருக்க முடியும்?

நாட்டின் பொது மொழியாக அறிவிக்க ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது, இந்நாட்டினுடைய மிகவும் பழமையான மொழியாகவும் அது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியைத்தான் நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியும், தமிழ் மொழிக்கு அதுபோன்ற சிறப்பு உண்டு என்பதை இதேநாளில் (14-.9.19-49) 70 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் நிர்ணய சபையில், தேசிய மொழி பிரச்சனை விவாதத்திற்கு வந்தபோது கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தெரிவித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

70 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் தீய நோக்கத்துடன் இந்தி மட்டுமே இந்தியாவை அடையாளப்படுத்தும் மொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாநில மொழிகளை ஆதிக்கம் செய்யும் வகையில் இந்தியை  எந்த உருவத்தில் திணிக்க முயற்சித்தாலும், தமிழகத்தில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனிதநேய மக்கள் கட்சி சளைக்காமலும், சலிக்காமலும் போராடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை!

தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *