Breaking News

8 வயது டெல்லி மாணவன் முஹம்மது அஜீம் மற்றும் 13 வயது சிறுமி ராஜலட்சுமி கொலை: நீதி கேட்டு சென்னையில் தமுமுக போராட்டம்!

8 வயது டெல்லி மாணவன் முஹம்மது அஜீம் மற்றும் 13 வயது சிறுமி ராஜலட்சுமி கொலை:
நீதி கேட்டு சென்னையில் தமுமுக போராட்டம்!
IMG_20181030_172104
தலைநகர் டெல்லியில் உள்ள மாளவியா நகரில் மதரசாவில் பயின்றுக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் முஹம்மது அஜீம் வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட நான்கு சிறுவர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதரசா விடுமுறை என்பதால் அதன் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பைக்கில் வந்த நான்கு சிறுவர்கள் சரமாரியாக பாலகன் அஜீமைத் தாக்கி பின்னர் தாங்கள் வந்த பைக்கை நோக்கி வீசியெறிந்துள்ளார்கள்.
மாளவியா நகரில் 1988 முதல் நடத்தப்பட்டு வந்த மதரசாவில் பயின்று வந்த மாணவன் தான் 8 வயது அஜீம். இந்த மதராசாவை சுற்றி வாழும் ஒரு சிலர் தொடர்ந்து அதற்கு அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளனர் என்றும் மதரசா வளாகத்திற்குள் காலியான மது பாட்டில்களை வீசுவது, பன்றிகளை விரட்டி விடுவது, பட்டாசுகளை வெடிப்பது, தொழுகை நேரத்தில் சப்தம் போடுவது போன்ற இடையூறுகளை அருகில் வசித்து வருவோர் தொடர்ந்து செய்து வந்தனர் என்று அம்மத்ரசாவின் முதல்வர்  மவ்லனா முஹம்மது அலி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மதரசா மாணவர்கள் வெளியில் விளையாடச் செல்லும் போது அவர்களை சிறுவர்களை ஏவி துன்புறுத்துவது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது என்றும் மவ்லானா முஹம்மது அலி அந்தப் போட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பெரியவர்களின் தூண்டுதலில் பேரில் இளம் வயதினரே இம்மதரசாவிற்கு எதிரான வெறுப்பூட்டும் செயலில் ஈடுபட்டு வந்தனர் என்றும் மவ்லான முஹம்மது அலி குறிப்பிட்டுள்ளார். மதராசாவிற்கு எதிராக சிறுவர்களைத் தூண்டிவிட்டு நடைபெறும் இந்த வெறுப்பு செயல்களுக்கு எதிராக பலமுறை தாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சிறுவர்கள் செய்யும் குற்றம் என்பதால் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மவ்லானா முஹம்மது அலி தனது பேட்டியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அக்டோபர் 25 அன்று விளையாடிக் கொண்டிருந்த பாலகன் அஜீமைக் கொன்ற இரு சிறுவர்களை மதரசா ஊழியர்கள் பிடித்து வைத்துக் கொண்டு காவல்துறைக்கு புகார் அளித்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்களைச் சுற்றி வளைத்தது. அதில் ஒரு பெண்மணி ‘இது ஒரு தொடக்கம் தான்’ என்று மிரட்டிவிட்டு இரு சிறுவர்களையும் மீட்டுச் சென்றுள்ளார்.
சிறுவர்கள் மனதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை விதைத்து அவர்களைப் பயன்படுத்தி நடைபெற்ற படுபாதகப் படுகொலையாக பாலகன் அஜீமின் படுகொலை அமைந்துள்ளது. பாலகன் அஜீமை படுகொலை செய்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி. அவரது வீட்டு அருகே வசித்து வந்த தினேஷ் குமார், சிறுமி ராஜலட்சுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வன்புணர்ச்சியில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். அதனை வெளியே சொல்லாமல் தனக்குள்ளேயே அழுதுகொண்டும் சாப்பிடாமலும் இருந்துள்ளார் ராஜலட்சுமி. கடந்த 22ஆம் தேதி மாலையில் தான் தன் தாய் சின்னப்பொண்ணுவிடம் கூறியுள்ளர். அப்போதுதான், கையில் கத்தியுடன் வந்த தினேஷ் குமார், சின்னப் பொண்ணுவை தள்ளிவிட்டு சிறுமி ராஜலட்சுமியின் தலையை தனியாக துண்டாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தப் படுகொலையைக் கண்டித்தும், ராஜலட்சுமியை கொடூரமாக கொலை தினேஷ் குமாரை சட்ட ரீதியாக அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர தமிழக காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், மதரசா மாணவன் அஜீமைக் கொல்லத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கைக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர் முஹம்மது அலி தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் அப்துல் சலாம், தென்சென்னை மாவட்டத் தலைவர் அபூபக்கர் கோரி முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி,  திரு. வன்னியரசு (விடுதலை சிறுத்தைகள் கட்சி), திரு.டி.எஸ்.எஸ். மணி (மனிதஉரிமை செயற்பட்டாளர்) ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
தமுமுக துணைத் தலைவர் பி.எஸ். ஹமீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மமக அமைப்புச் செயலாளர் வழக்குறைஞர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *