Breaking News

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு!
stage 1 - Copy
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று (மே 2) நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தமுமுகவில் அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வந்த தேர்தலின் இறுதியில் சென்னை காமராசர் அரங்கில் தலைமை நிர்வாகிகளுக்கான தேர்தலில் தமுமுகவின் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளராக எஸ்.ஹைதர்  அலி, பொருளாளராக பொறியாளர் எஸ். ஷபியுல்லா கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் சுருக்கம்;
நீதியரசர் ராஜிந்தர் சச்சார் மறைவிற்கு இரங்கல்
நீதியரசர் ராஜிந்தர் சச்சார் உயர்நிலைக் குழு அறிக்கை மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் ஆகியவை பரிந்துரைகளையும் மத்திய மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தேசியப் புலனாய்வுக் குழுவுக்கு கண்டனம்
சங்பரிவாரப் பின்புலம் கொண்ட அசிமானந்தா உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு வழி வகுக்கின்ற அதே நேரத்தில் பொய்க் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறியுள்ள எம்.ஐ.ஏ.வை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பாபரி மஸ்ஜிதை மீண்டும் எழுப்புக
பாபரி மஸ்ஜித் இடிப்பு சட்டப்படியான நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், இடிக்கப்பட்ட இடத்திலேயே பாபரி மஸ்ஜித் மீண்டும் எழுப்பப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 சட்டநீதியில் சமூகநீதி
உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் முஸ்லிம் சமுதாயம் உள்ளிட்ட புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை சமுதாயங்களைச் சேர்ந்த நீதிபதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் பெறும் வகையில் உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
ஆசிஃபா விவகாரம்
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமியைக் கடத்தி எட்டு நாட்கள் சீரழிக்கப்பட்ட கொடுமையை இழைத்த மீதான வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டும் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இந்த வழக்கை நேர்மையாகவும் துணிவாகவும் விசாரித்த காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் ஜல்லா இவ்வழக்கு நீதிமன்றக் கண்காணிப்போடு நேர்மையாக விசாரிக்கப்படக் காரணமாக இருந்த தீபிகாசிங் ரஜ்வத் ஆகியோருக்கு இப்பொதுக்குழு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
சிறைவாசிகளின் விடுதலை
பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் அனைத்து சிறைவாசிகளும் பாரபட்சமற்ற முறையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மரணத்தின் விளிம்பில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் உள்ள அபுதாஹிரின் முன்விடுதலையைத் தடுக்கும் விதத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள (289 நாள் 25.04.2018) அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து அவரை விடுதலை செய்ய  வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
உள்ளாட்சியில் இடஒதுக்கீடு
உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களுக்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி
மூர்க்கத்தனமான உள்நோக்கத்தோடு மோடி அரசு கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்த்து நின்ற திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு இப்பொதுக்குழு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
திருப்பூரில் பள்ளிவாசல்களுக்கு இடையூறு 
தங்கள் சொந்த பட்டா இடத்தில் பள்ளிவாசல் அமைக்க அனுமதி அளிக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் திருப்பூரில் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
டாக்டர் கஃபில்கானுக்கு பாராட்டு; யோகி ஆதித்தியநாத்துக்கு கண்டனம்
உ.பி. கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தனது சொந்த முயற்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வரவழைத்து எஞ்சிய குழந்தைகளின் உயிரைப் பாதுகாத்த டாக்டர் கஃபில்கானைக் குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்த அருவருப்பான அயோக்கியத் தனத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போது பிணையில் வெளிவந்துள்ள டாக்டர் கஃபில் கானுக்கு இப்பொதுக்குழு நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
கறுப்புச் சட்டங்களை அகற்ற வேண்டும்
அரசியல் மற்றும் சமூகப் பழிவாங்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் (UAPA) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) மற்றும் GUJCOCA, MCOCA, KCOCA ஆகிய சட்டங்கள் முஸ்லிம்களையும் தலித்துகளையும் பழங்குடியின மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. UAPA  சட்டத்தில் 2008 2011 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் இக்கருப்புச் சட்டத்தை இந்திய நீதித்துறையில் நிரந்தரச் சட்டம் போல் இதை நீடிக்கச் செய்துள்ளன. இத்தகைய கருப்புச் சட்டங்களை மத்திய அரசு கைவிட்டு மனிதஉரிமையைப் பாதுகாக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
சிரியா கொடுமைகளுக்கு கண்டனம்
சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீதும் குறிப்பாக குழந்தைகளின் மீதும் சர்வாதிகார பஷர் அல் ஆசாத்தின் அரசு ரஷ்ய, ஈரான் கூட்டுப்படைகளின் துணையோடு நடத்திவரும் கொடுமைகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு நீதி
உலகளாவிய அளவில் ஒடுக்குமுறைக்கு உள்ளானதில் முதலிடத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இப்பொதுக்குழு தனது தார்மீக ஆதரவையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்திய அரசு உரிய அரவணைப்பும் பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்றும், மியான்மர் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து ரோஹிங்கியர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பாலஸ்தீனுக்கு ஆதரவு
பாலஸ்தீன் மக்கள் மீது காலங்காலமாய் இஸ்ரேல் நடத்திவரும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பாலஸ்தீன தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் தேசத்தந்தை காந்தியடிகளின் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியோடு நிற்கவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
காஷ்மீர் அராஜகங்களுக்கு கண்டனம்
மனிதஉரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டவர்களாக அல்லற்பட்டு வரும் காஷ்மீர் மக்களுக்கு இந்தப் பொதுக்குழு தார்மீக ஆதரவைத் தெரிவிக்கிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் உதவியோடு சீருடையில் உள்ள சீர்கெட்ட மனத்தினர் காஷ்மீரில் செய்துவரும் சொல்லொண்ண கொடுமைகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
சமூக நல்லிணக்கம்
ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் சமூக நீதியைக் காத்திடவும் வெறுப்பு அரசியலை விதைத்து சமூகப் பகைமையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முனையும் சங்பரிவார சக்திகளின் சதிகளிலிருந்து தேசத்தைப் பாதுகாத்து சமூக நல்லிணக்கத்தைக் கட்டிக் காத்திடவும் முன்னிலும் பன்மடங்கு அதிகமாக சமூகக் களத்திலும் கருத்தியல் தளத்திலும் கழகம் பணியாற்றும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

Check Also

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *