Breaking News

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு!

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு!
railway
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து சேவை அதிகம் தேவையுள்ள தமிழகத்திற்கு மிகக் குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்தமிழக மக்களை ரயில்வே துறை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
புதுவகைப் பெட்டிகள், கூட்டாண்மை நிறுவனம் அமைத்தல், புதிய ரயில் பாதைகள், புல்லட் ரயில் ஆகியவற்றின் பணிகளில் தமிழகம் மிகவும் பின்னடைவில் உள்ளது. கடந்த 8 ஆண்டுளில் தமிழகத்தில் தர்மபுரி-மொரப்பூருக்கு இடையிலான ஒரேஒரு புதிய ரயில்பாதை மட்டுமே 2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்றியது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட புதிய ரயில் பாதைகளில் சிதம்பரம்-ஆத்தூர், போடிநாயக்கனூர் – கோட்டயம், மயிலாடுதுறை -காரைக்கால், தஞ்சாவூர்-அரியலூர், திண்டுக்கல் – குமுளி ஆகியவற்றின் மீதான சர்வே பணிகள் முடிந்துவிட்ட நிலையிலும் ரூ.3,754 கோடி மதிப்பிலான இத்திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதியளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அதேபோல் சென்னை-வில்லிவாக்கம் இடையே 5-வது பாதை, வில்லிவாக்கம் – காட்பாடி கூடுதல் பாதைக்கும், 2015-16 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம்  -கன்னியாகுமரி இடையிலான ரூ.1,298 கோடி கூடுதல் பாதை போன்றவைகளுக்கான சர்வே பணிகள் முடிந்து ஆண்டுகள் பல ஆனபின்பும் இந்த திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளிக்காமல் உள்ளது. மத்திய- மாநில அரசு அதிகாரிகள் இணைந்து பணியாற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதுபோன்ற கூட்டாண்மை நிறுவனம் தொடங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது.
பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது கலந்துகொண்ட மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து டெல்லிக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரயில் விடப்பட வேண்டும் என்றும், மீனவர்களின் வசதிக்காக இப்பகுதியில் ஓடும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்றும் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையையும் மத்திய பாஜக அரசு புறக்கணித்து உள்ளது என்பது வேதனைக்குரியது.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *