Breaking News

கோவை சிறையில் ஆயுள் சிறைவாசி அப்துல் ஒசீர் மரணம்: நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

கோவை சிறையில் ஆயுள் சிறைவாசி அப்துல் ஒசீர் மரணம்: நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
wazeer
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கோவை மத்திய சிறையில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வந்த இதய நோயாளியான அப்துல் ஒசீர் இன்று காலை கடும் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பிறகு கோவை அரசினர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது, ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்த அப்துல் ஒசீர் தனது இறுதி நாட்களை சிறையிலேயே கழித்து மரணம் அடைந்துள்ளது வேதனைக்குரியது.
10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து விட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றன. கடந்த 14வது தமிழக சட்டமன்றத்தில் இந்தக் கோரிக்கையை பலமுறை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முன்வைக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
குறைந்தபட்சம் கடும் நோயினால் அவதிப்படும் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவும் தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இந்தக் கோரிக்கைகளை ஆளும் அதிமுக அரசு நிறைவேற்ற வில்லை. இதன் விளைவாக சமீப காலமாக ஆயுள் சிறைவாசியாக கோவை சிறையில் மட்டும் மரணித்த முஸ்லிம்களில் அப்துல் ஒசீர் மூன்றாவது நபர் ஆவார். தஸ்தகீர் என்ற ஆயுள் சிறைவாசி குடல்வால் அறுவை சிகிச்சைக்குர் பிறகு சிறையில் முறையான தொடர் சிகிச்சைகள் அளிக்காததால் மரணித்தார். இதே போல் 17 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த சபூர் ரஹ்மான் (20 வயதில் சிறைக்குச் சென்றவர்) தனது 37 வது வயதில் சிறையிலேயே இதய நோயினால் மரணித்தார். தற்போது 19 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த அப்துல் ஒசீர் இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் நிலையில் மரணித்துள்ளார்.  இன்னொரு ஆயுள் சிறைவாசி சிறையிலேயே மரணிக்கும் முன் தமிழக அரசு உடனடியாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ஆண்டுதோறும் தமிழக சிறைகளில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படும் சிறையிலேயே சராசரியாக 60 பேர் மரணிக்கின்றார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. தமிழ்நாடு சிறைவிதிகளின் படி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு. இந்த அடிப்படையில் சிறையில் நோய்வாய்ப்பட்டுள்ள அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு உடனே விடுவிக்கவும், சிறை தண்டனை அனுபவித்த வந்த அப்துல் ஓசீரின் இந்த மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சிறைவிதிப்படி ஆயுள்தண்டனைப் பெற்ற 65 வயதுக்கு மேலான முதியவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு பெண் மகளுக்கு தந்தையான அப்துல் ஒசீரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 சகோதரர் அப்துல் ஒசீர் அவர்களை இழந்து பரிதவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
 மனிதநேய மக்கள் கட்சி

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *