Breaking News

ஜெயலலிதாவின் அதிகார அரசியலும், கலைஞரின் வெற்றியும்…

ஈழத்தமிழர் விவகாரத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு (TESO) என்ற பழைய ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார் கலைஞர். ‘டெசோ’வின் சார்பில் ஈழத்தமிழன் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு (12.08.2012) சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கவிருந்த நிலையில், தமிழக அரசு அந்த மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கிறது.

இது கலைஞருக்கு கிடைத்திருக்கும் அரிய வெற்றியாகும். இம்மாநாடு குறித்து பெரும் கண்டனங்களையும், கடும் விவாதங்களையும் சந்தித்த கலைஞரை, முதல்வர் ஜெயலலிதாவின் இச்செயல் காப்பாற்றியிருக்கின்றது. ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக இந்த அளவுக்கு முன்னேறியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் கடைசிக் கட்டப் போரில் பரிதவித்து நின்றபோது காங்கிரஸ் ‘கூட்டணியின்’ நலனுக்காக அவர் செயலற்று இருந்தார். அந்தக்கருப்பு நாட்களைக் கழுவ கலைஞருக்கு இம்மாநாடு ஒரு சிறிய வாய்ப்பை வழங்கியுள்ளது. தனித்தமிழ் ஈழம் கோரும் மாநா டாக இது அமைந்திருந்தால், உலகத் தமிழர்களின் பெரும் வரவேற்பை இம்மாநாடு பெற்றிருந்திருக்கும். ஆனால், மத்திய அரசில் பங்கேற்றுக் கொண்டு இந்திய வெளியுறவு ‘கொள்கைக்கு’ எதிராக செயல்பட ‘கூட்டணி தர்மம்’ அனுமதிக்கவில்லை.

அதைவிட முக்கியக் காரணம் ஒன்று உண்டு. அதை யாருமே கவனிக்கவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோரும் தீர்மானத்தை திமுக நிறைவேற் றினால், அது இந்தியாவை பீதிக்குள் ளாக்கும்.

காரணம், காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என பாகிஸ்தான் செய்து வரும் சர்வதேசப் பிரச்சாரத்தை அது வேறு வகையில் நியாயப்படுத்தி விடும்.

மத்திய உளவுத் துறையும், வெளியுறவு ராஜதந்திரிகளும் இதை மன்மோகன் சிங்கிடமும், ப.சிதம்பரத்திடமும் சுட்டிக் காட்டிய பிறகுதான் அவர்கள் தங்களின் ‘தர்மசங்கடத்தை’ கலைஞரிடம் சுட்டிக் காட்டி, தனி ஈழ தீர்மானத்தைக் கைவிடச் செய்திருக்கிறார்கள். இவ்விஷயத்தில் கலைஞர் பின் வாங்கியது, ஈழத்தமிழர் விவகாரத்தில் அவரை ஒரு சந்தர்ப்பவாதியாக தோற்றம் ஏற்படுத்திவிட்டது என விமர்சனங்கள் எழுந்தன.

அவை எல்லாவற்றையும் மீறி கலைஞரின் ‘டெசோ’ முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. எப்படி? மாநாட்டிற்கு தமிழக அரசு விதித்த தடைதான் அதற்குக் காரணம்! முதல்வர் ஜெயலலிதாவின் ‘திமிர்’ தன அரசியல், கலைஞரே எதிர்பார்க்காத வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறது.

கடைசியாக நீதிமன்றம் சென்று அதே இடத்தில் மாநாடு நடத்த அனுமதிபெற்று எழுச்சியோடு மாநாட் டையும் நடத்தி முடித்திருக்கிறார் கலைஞர். ஜெயலலிதா சீண்டியதால் மாநாடு விளம்பரப்படுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டது. கலைஞரின் டெசோ மாநாட்டை எதிர்த்த வைகோ, பழ.நெடுமாறன் போன்றோர் கூட மாநாட்டுக்கு தடைவிதித்த தமிழக அரசைக் கண்டித்ததன் மூலம் விரும்பியோ விரும்பாமலோ டெசோ மாநாட்டை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

 

–தமிமுன் அன்சாரி

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *