Breaking News

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதியைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், சென்னை மற்றும் கோவையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

மும்பையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தும் காவல்துறையினரின் பாதுகாப்பு மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டன. இதனால், மைதானத்திற்கு வெளியிலிருந்த சந்தேகத்திற்கிடமான சில நபர்கள் முகத்தில் துண்டைக் கட்டிக்கொண்டு பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பத்திரிக்கைத் துறையினர் மற்றும் காவல்துறை வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

உடனடியாக கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். பின்னர், ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு முஸ்லிம்கள் பலியானார்கள். முஹம்மது உமர் (வயது 17), அல்தாப் ஷேக் (வயது 22) ஆகிய அப்பாவிகள் இருவரும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் சம்பவ இடத்திலேயே பலியாயினர். அறுபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த அனைவரும் மும்பையில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனை, ஜி.டி. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைக்கு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் செயலற்றத் தன்மையே காரணமென பல்வேறு ஊடகத் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பை காவல்துறை கண்காணிப்பாளர் அரூப் பட்நாயக், துணை கண்காணிப்பாளர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் மக்களை அமைதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், மிகவும் தாமதமாக காவல்துறைஅதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததால் எவ்விதப் பயனும் அளிக்கவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் குறிப்பிடுகிறது.

அஸ்ஸாமில் முஸ்லிம்களைப் படுகொலை செய்துவரும் போடோ தீவிரவாதிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாத காங்கிரஸ் அரசு, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தும் முஸ்லிம்கள் மீது மட்டும் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தும் மும்பை காங்கிரஸ் அரசின் காவல்துறை செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்தக் கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெறாமலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தண்ணீர் பீய்ச்சி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்தாலே கூட்டத்தைக் கலைத்திருக்க முடியும். சிறுபான்மை சமுதாயத்தின் மீது அடக்குமுறைகளை ஏவிவிடுவதே காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், ரஜா அகாடமியின் பொதுச் செயலாளர் முஹம்மது ரபீக் குறிப்பிடுகையில், ‘‘இந்த வன்முறைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டோம். இந்த சம்பவத்திற்கு காவல்துறையின் செயலற்றத் தன்மையே காரணம். இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

ரஜா அகாடமியின் தலைவர் முஹம்மது செய்யது நூரி குறிப்பிடுகையில், ‘‘வன்முறை செய்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. புனிதமிகு ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருப்பவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கியுள்ளனர்’’ என்றார்.

நியாயமான கோரிக்கைக்காக புனிதமிகு ரமலான் மாதத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது கவலைக்குரியது. அதுவும் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில்30க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக, தகவல்கள் கூறுகின்றன. மும்பையில் மக்கள் அமைதியை நோக்கி செல்லும் வகையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தி ஹிந்து நாளிதழ் பேட்டி எடுத்தது. அவர்களில் சிலர் கூறுவதை பெட்டி செய்திகளில் வாசிக்கவும்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

நஃபீஸ் அஹமது

அஸ்ஸாமிலும், மியான்மரிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். எவ்வித ஈவு இரக்கமின்றி சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் கொல்லப்படுகின்றனர். ஆனால் இந்திய ஊடகங்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? 24ஜ்7 தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் அமெரிக்காவிலுள்ள சீக்கிய மதத்தினருடைய குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதலில் 7 பேர் பலியானதை பெரிய அளவில் ஒளிபரப்புகின்றனர். ஆனால் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படும் போது அச்செய்திகள் குறித்து ஊடகங்கள் அமைதி காக்கின்றன. முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது மனிதாபிமானத்தோடு செய்திகளை சேகரித்து வெளியிடுவதில்லை. இருந்தபோதிலும், பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்துவது தவறு. வன்முறைப் பாதை சரியான நடைமுறை அல்ல.

முஹம்மது சபீக் அஹமது

ஒலிம்பிக் போட்டியை ஒளிபரப்புவதற்காக மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்று செய்திச் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. அமெரிக்காவிலுள்ள குருத்வாராவில் தாக்குதல் நடத்தும் போது நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். ஆனால் அஸ்ஸாமிலும், மியான்மரிலும் முஸ்லிம்கள் கொல்லப்படும் காட்சிகளைப் படமெடுக்க இந்திய ஊடகங்கள் அஸ்ஸாமிற்கும், மியான்மருக்கும் ஏன் செல்வதில்லை?

இப்ராஹிம் சேக்

(ஹஜ் கமிட்டி உறுப்பினர்) அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் செயல்களில் தீவிரமாக இறங்க வேண்டுமென நாங்கள் மத்திய அரசையும், மஹாராஷ்டிர அரசையும் வலியுறுத்துகிறோம். பத்திரிக்கையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கு வருந்துகிறோம். இந்தத் தாக்குதலை சமூகவிரோத சக்திகள் நடத்தியுள்ளனர்.

–என்.ஏ.தைமிய்யா

Check Also

ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்கள்!

உலக முஸ்லிம்கள் உற்சாகமாக ரமளானைக் கொண்டாட ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், பர்மிய முஸ்லிம்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவியாய் …

One comment

  1. Assalamu alaikum..

    I am residing in Butt Road,chennai-600016, Kindly update me how to become a member in TMMK.

    Regards
    sheik ziyaudeen
    9789933623

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *