Breaking News

ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்கள்!

உலக முஸ்லிம்கள் உற்சாகமாக ரமளானைக் கொண்டாட ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், பர்மிய முஸ்லிம்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு கணமும் பௌத்த தீவிரவாதிகளின் கொலை வாளுக்கு அஞ்சி உயிர்காத்துக் கொள்ள புகலிடம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகின் மிகவும் மோசமாக கொடுமைக்குள்ளான சிறுபான்மை இனம் என்று ஐ.நா. மன்றத்தால் முத்திரைக் குத்தப்பட்ட ரோகின்ய பர்மிய முஸ்லிம்கள் வாழும் ராகின் மாநிலம் மேற்கு மியான்மரில் அதாவது மேற்கு பர்மாவில் அமைந்துள்ளது. மூன்று மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட இந்த மாநிலம் மேற்கில் வங்கக் கடலை எல்லையாகக் கொண்டது. இங்கு பெரும்பான்மை இனமாக பௌத்தர்கள் வாழ்கிறார்கள்.

அரகான் பகுதியில் வாழும் ரோகின்ய முஸ்லிகளின் துன்பம்-துயரங்கள் இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. மார்ச் 18, 1942 இல் சுமார் 5 ஆயிரம் முஸ்லிம்கள் கொடூரமான முறையில் ராகின் தேசியவாதிகளால் ‘மின்பயா’ மற்றும் ‘மொரோஹாங்’ பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தத் துயர சம்பவத்துக்குப் பிறகு இவர்கள் மீது பர்மிய அரசால் இழைக்கப்படும் அநீதிகள் அடக்குமுறைகள் தொடர் கதைகளாயின. இவர்களுக்கு சட்ட ரீதியான குடியுரிமைகளைத் தர அரசாங்கம் மறுத்துவருகிறது.

ஐ.நா.மன்றத்தின் அகதிகளுக்கான முதன்மை ஆணையரின் கூற்றுப்படி, அவர்களுக்கு சட்ட ரீதியான குடியுரிமை மறுக்கப்படும்; அவர்கள் எத்தகைய அடக்குமுறைகளையும் சகித்துக் கொள்ள வேண்டும்; அவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒடுக்கப்படும்; கல்வி கற்கும் உரிமையோ அல்லது சொத்துரிமையோ மறுக்கப்படும் என்பது பொருளாகும். ஒரு அரசாங்கமே தன் குடிமக்களுக்கு எதிராக நடத்தும் இத்தகைய அராஜகப் போக்கை சகிக்க முடியாமல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷிற்கும் இன்னும் 24 ஆயிரம் பேர் மலேசியாவிற்கும் தங்களைக் காத்துக்கொள்ள தப்பிச்சென்று விட்டார்கள்.

இன்னும் பலர் தாய்லாந்துக்கு புகலிடம் தேடிச் சென்றுவிட்டார்கள். தாய்லாந்தோ, பங்களாதேஷோ இவர்களை இன்முகத்துடன் வரவேற்று அடைக்கலம் அளிக்கவில்லை. பங்களாதேஷ், அகதிகளாக வந்துள்ள ரோகின்ய முஸ்லிம்களை திரும்பவும் அழைத்துக் கொள்ளும்படி பர்மிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் தாய்லாந்தோ அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. இந்நாடு இன்னும் ஒருபடி மேலே சென்று, அகதிகளாக குழந்தைகள், பெண்கள் சகிதமாக படகுகளில் வருவோரை கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் தடுத்து நிறுத்தி பலவந்தமாக அப்படகுகளை இடித்து நீரில் மூழ்கடிக்கும் முயற்சிகளில் இறங்கிவருகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ (Human Right Watch) “பர்மிய அரசு ரோகின்ய முஸ்லிம்களை கொத்தடிமைகளாக மாற்ற வற்புறுத்தி வருகிறது!” -என்ற தகவலையும் தருகிறது. இப்படி மாற மறுப்போரை கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்குவதாகவும் முஸ்லிம்களின் ஏழு வயதுக்குட்பட்ட சின்னஞ் சிறுவர்கள்கூட இத்தகைய கொத்தடிமை சிறார் குழுக்களில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சிகரமான தகவலையும் தொடர்ந்து தருகிறது. ‘வாட்டர்லூ’ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் முஹம்மது எல்மஸ்ரி ‘தி எகிப்தியன் கெஸட்’டுக்கு எழுதும் போது, ரோகின்ய முஸ்லிம்கள் வரலாற்று ரீதியாகவே பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகிவருவதை சுட்டிக் காட்டுகிறார். இந்த மக்கள் மீது தனி வரி விதிக்கப்படுவதாகவும், பலவந்தமாக தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படுவதாகவும், அவர்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதாகவும், திருமண நேரங்களில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் குறிப்பிடுகிறார். ரோகின்ய முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் இராணுவ முகாம்களில் கீழ்நிலைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையும் வருத்தத்தோடு எழுதுகிறார்.

தனது சொந்த குடிமக்களிடம் பர்மிய அரசு காட்டும் பாரபட்சத்தை – முஸ்லிம்களை பர்மிய அரசு நடத்தும் மிக மோசமான நிலையை சர்வதேச அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. பல்லாண்டுகளாக பர்மிய அரசாலும், பௌத்த தீவிரவாதிகளாலும் துன்பங்களை அனுபவித்து வரும் ரோகின்ய முஸ்லிம்களுக்கு ஆதரவாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் உரத்துக் குரல் எழுப்பி வருகின்றன. 2009 மே மாதத்தில் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் ஆசியாவுக்கான இணை இயக்குனர் ‘எலைன் பெர்ஸன்’ ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, ‘அசோசியேஷன் ஆப் சவுத் ஏசியன் நேஷன்ஸ்’ (ASEAN) என்ற அமைப்பு பர்மிய அரசின் செயல்களைக் கண்டித்து வற்புறுத்த வலியுறுத்தினார். அப்போது அவர் “பர்மிய அரசாங்கம் ரோகின்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துள்ள அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளை கிடைக்கச் செய்ய வேண்டும் -என்றார். ஆனால், பர்மிய அரசோ அவர்களை தன் சொந்த குடிமக்கள் என்ற அந்தஸ்தைக் கூட தர மறுப்பதை சுட்டிக் காட்டி வருத்தப்பட்டார். ஏற்கனவே துன்பத்துக்கு மேல் துன்பங்களை அனுபவித்து வரும் பர்மிய முஸ்லிம்கள் தற்போது மீண்டும் அலை அலையான அடக்கு முறைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஐ.நா. மன்றத்தின் ஓர் அறிக்கையின் படி தற்போது நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வெறிக்கு பலியாகி அகதிகளானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரம்வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் துல்லியமாக கணக்கிடுவது சாத்தியமில்லை! ராகின் மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் முஸ்லிம்களின் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இது பர்மிய நாட்டின் மனித உரிமை மீறலுக்கான ஒரு படி பின்னடைவு என்கிறது ‘சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனல்’. ‘தி ஆர்கனைசேஷன் ஆப் இஸ்லாமிக் கோ- ஆப்ரேஷன், (OIC) பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்துள்ளது. அங்கு கொல்லப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சம்பந்தமான உண்மைத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில் ‘டைம் துர்க் நியூஸ்’ ஏஜென்ஸி, சமீபத்தில் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்தக் கொடுமையை மேற்கத்திய சர்வதேச ஊடகங்களோ வாய்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு தலைப்புகளில் புத்தம்புது செய்திகளை அதுவும் உலக முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன. மேற்கத்திய ஊடகங்களைப் போலவே மேற்கத்திய நாடுகளும் பார்வை இழந்தோரின் நிலையிலேயே உள்ளன. உலகமே தலையில் வைத்துக் கொண்டாடிய ஜனநாயகப் போராளி, பர்மிய அரசியல் நாயகி ஆங் சென் சுகி, தனக்கு நோபல் பரிசு அளிக்க நார்வேயில் நடந்த கூட்டத்தில் ஒரே ஒரு வார்த்தைக் கூட -பர்மிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை சுட்டிக்காட்டி பேசவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

மனசாட்சி மிகுந்த உலக மக்கள் இன வெறியால் கொல்லப்படும் பர்மிய முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டும். இது அவர்களின் தார்மீகக் கடமையும்கூட. பெயர்தாங்கிகளான சர்வதேச சமூகமோ வாய்மூடி மௌனமாக உள்ள நிலையில் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறைக்கு குரல் எழுப்ப வேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.

இக்வான் அமீர்

Check Also

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *