அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்துணர்வை ஊட்டியது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இஹ்வான்களின் கொள்கைகள் நாலாபுறங்களிலும் பற்றிப்பரவி வருகிறது.
இஹ்வான்களின் உத்வேகம் பரவியதைவிட வேகமாக அதுபற்றிய பீதியும் அதிவேகமாகப் பரவுகிறது. தங்கள் நாட்டு அரசில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். எந்த நாட்டு அரசுத் துறையில் இஹ்வான்கள் ஊடுருவியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு புறப்பட்டது என்பதை அறிந்தால் நிச்சயம் நீங்கள் திகைப்பும் திணறலும் அடைவீர்கள். அமெரிக்க அரசின் உயர் துறைகளில் இஹ்வானிய ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிச்சேல் பச்மான் என்ற பெண் செனட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ஹுமா ஆபிதீன், இஹ்வான்களின் கொள்கைகளைப் பரப்புபவர் என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஒபாமாவின் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான கீத் எலிஸன், இஹ்வானுல் முஸ்லிமீன் கொள்கைப் பரப்புரையாளர் என மிச்சேல் கூறியுள்ளார்.
ஒபாமா அரசில் செல்வாக்கோடு செயல்படும் முஸ்லிம்களின் செல்வாக்கை வேரோடு வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கீத் எலிசன் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இஹ்வான்களின் எழுச்சி மேற்குலகை மிரளச் செய்துள்ளது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
மேற்குலகம் மற்றும் சியோனிச சக்திகள் எகிப்தின் புரட்சி கண்டு மிரட்சி கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இவை எல்லாமே ஆரம்ப சூரத்தனமாகவே இருக்க முடியும். மேற்குலக ஏகாதிபத்தியம் எகிப்திய புரட்சியைக்கூட கொன்று, தின்று ஜீரணித்து விடும் வலிமை கொண்டது என சிலர் கூறிக்கொண்டிருந்த கதையெல்லாம் பழங்கதையாயின. தாய் மண்ணை மீட்கப் போராடிவரும் ஏழைகளாய், அகதிகளாய், பூமிப்பந்தில் அலைந்து திரியும் பாலஸ்தீன மக்கள் இனி எவ்வித கெடுபிடியும் இல்லாமல், கேள்விக்கணக்கும் இன்றி, விசா என எந்த இழவு ஆவணங்களும் இன்றி அவர்கள் எகிப்தில் நுழையலாம்; தங்கலாம்; வாழலாம் என்ற முழு அனுமதி எகிப்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேஷ அனுமதி அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், எகிப்தின் விமான முனையங்களில் இருந்தும் பல்வேறு எல்லைப்புறங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் எகிப்தில் குவியத் தொடங்கினர்.
நிகாப் அணிந்த பெண்கள் பிரத்யேக தொலைக்காட்சி சானல் நடத்திக்கொண்டுள்ளார்கள். அது எகிப்திய பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபு வசந்தத்தின் முதல்கட்ட வெற்றி என கொண்டாடப்படும் நிலையில் இதன் போக்கு எந்த திசையை நோக்கி நகரும், அது முற்றுப்பெறும் போது எத்தகைய காட்சிகள் அமையும் என அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளனர் என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருக்கட்டும், அரபு வசந்தப் புரட்சிகள் இத்துடன் ஒடுங்கிவிடும் என யாரும் கருதவேண்டாம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்திருக்கிறார்.
பரிசுத்த மஸ்ஜிதே அக்ஸாவின் மீட்போடு அரபு வசந்தம் முற்றுப்பெறும் என தன் நம்பிக்கையை தெரிவித்துள்ளார். பாரம்பரிய உணர்வுகளையும் யார் யாரோ தீர்மானித்த வரையறைகளையும் மாற்றி எழுதும் திருப்புமுனை காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
தற்போதைய அமைப்பு முறைகள் தகர்க்கப்படும். அரசியல் வரைபடம் மாற்றி அமைக்கப்படப் போகிறது. பூமிப்பந்தில் குழப்பம் விளைவிக்கும் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து கீழே தள்ள முஸ்லிம் உம்மா முடிவு செய்துவிட்ட முக்கிய தருணம் இது.
உண்மைதான். அரபுலக வசந்தத்தின் முதல் வெற்றி அதைத்தான் அறைந்து சொல்கிறது.
– நிறைவு
–அபுசாலிஹ்