Breaking News

கஜகஸ்தானில் வளர்ந்துவரும் இஸ்லாமிய வங்கியியல்

கடன் உதவி பெறுவதற்காக இரண்டு நபர்கள் அந்த வங்கியை அணுகினார்கள். அதில் ஒருவர் இமாம் எனப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர். அடுத்தவரோ கிருத்துவ விவசாயி. இமாமுக்கு பள்ளிவாசலின் கூரையை செப்பனிட கடனுதவி தேவைப்பட்டது. கிருத்துவ விவசாயிக்கோ நிலத்தை உழவும் வேளாண் பணிகளுக்காகவும் ஒரு டிராக்டர் வாங்க கடனுதவி தேவைப்பட்டது. இருவரின் பிரச்சனைகளைக் கேட்ட வங்கி அதிகாரி தமது சொந்த பணத்தைப் பையிலிருந்து எடுத்து இமாமிடம் நன்கொடையாகக் கொடுத்து பள்ளிவாசல் கூரையை செப்பனிட பயன் படுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறார்; கிருத்துவ விவசாயிக்கு டிராக்டர் வாங்க கடனுதவி செய்கிறார்.

இந்த செய்தியில் வியப்பு என்ன? என்று கேட்டால் இந்த சம்பவம் நடந்தது முன்னாள் சோவியத் குடியரசிலிருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரம் பெற்ற கஜகஸ்தானில்! கடனுதவி செய்தது அங்கு செயல்படும் இஸ்லாமிய வங்கி! இஸ்லாமிய அறப்பணிகளுக்காக நன்கொடை யும், கஜகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவி லிருந்து வந்த கிருத்துவ விவசாயிக்கு எளிய தவணை முறையில் உடனுக்குடன் டிராக்டர் வாங்க கடனுதவியும் வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவை மையமாகக் கொண்டு கஜகஸ்தானில் செயல்படும் புகழ்பெற்ற இஸ்லாமிய வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏரியன் பைதாலுட், “எங்கள் வங்கியில் விநியோகிக்கப் படும் டாலர் நோட்டுகளிலும் “பிஸ்மில்லாஹ் -(இறைவனின் திருப்பெயரால்..)”-என்று அச்சிடப்பட்டவைகளையே வழங்குகிறோம்!”- என்று அசைக்க முடியாத இறைநம்பிக்கையை விவரிக்கிறார்.

கம்யூனிஸ சித்தாந்த செங்கோட்டை தகர்ந்து சோவியத் குடியரசு பல நாடுகளாக சிதறுண்டது. அதிலிருந்து 17 மில்லியன் மக்கள் தொகையுடன் அதைவிட ஏராளமான பிரச்சனைகளுடன் பிரிந்த நாடுகளில் ஒன்றுதான் கஜகஸ்தான். அது நாத்திகவாதத்திலிருந்து விடுபட்டு ஒரு இருபது ஆண்டுகள் கூட ஆகியிருக்காது. இந்த குறுகிய காலத்துக்குள் வீழ்ச்சியுற்றிருந்த அந்நாட்டு பொருளாதார அமைப்பை இஸ்லா மியப் பொருளியல் சித்தாந்தம் பெருமளவில் சீர் செய்துவிட்டதை மக்கள் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறார்கள். அதில் மிகவும் முக்கிய மானது மனித உழைப்பை முழுவதும் சுரண்டும் வட்டிக்கு தடை விதித்ததும்.

கஐகஸ்தானின் அதிபரான ‘நூருல் சுல்தான் நாஸர் பையோவ்’ ஒன்றுபட்ட சோவியத் குடியரசிலிருந்தே பதவி வகித்து வருபவர். முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற சோவியத்திலிருந்து பிரிந்த நாடுகளிலும் இஸ்லாமியப் பொருளியல் அமைப்பைக் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே வற்புறுத்தி வருபவர். கஜகஸ்தானின் மொத்தமக்கள் தொகையில் 70 விழுக்காடு பேர் முஸ்லிம்கள். வளர்ந்துவரும் இளந்தலைமுறையும் உலகப் பொருளாதார வீழ்ச்சியும், சரிந்துவரும் உலக வாழ்வியல் விழுமியங்களும் இளந்தலைமுறையினரை மாற்று அமைப்பை தேடச் செய்துள்ளது. அவர்களின் நிதர்சன ஆய்வில் சர்வரோக நிவாரணியாக செயல்படும் இஸ்லாம்தான் ஒரே தீர்வாக அவர்களை வேகமாக ஈர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் கஜகஸ்தானில் வட்டிக்கு முழு தடைவிதிக்கப்பட்டதும், ஆக்ககரமான தொழில்களில் அவர்களின் பொரு ளாதாரம் முதலீடு செய்யப்படுவதும். சமயச் சாயல்களே கூடாது என்று பலவந்தப் படுத்தப்பட்ட கம்யூனிஸ அமைப்பிலிருந்து பிரிந்து வந்தவர்கள் இஸ்லாமிய சமயநெறிகளே மனிதப் பிரச்சனைகளுக்கு ஒரேதீர்வு என்று நிரூபிப்பதும் அவற்றை அமல்படுத்துவதும் அவ்வளவு எளிமையானதாக இல்லை. ‘இஸ்லாமிய வங்கி முறைமையில்’ வட்டியில் லாமல் இஸ்லாமிய வங்கி செயல்படும் விதம் குறித்து அச்சிடப்பட்ட கையடக்கப் புத்தகங்கள் விலைபோகவில்லை. இன்னும் சில புத்தக விற்பனை நிலையங்கள் அவற்றை வாங்கிவிற்கத் தயாராக இல்லை.

அபுதாபியை மையமாகக் கொண்டு இயங்கும் ‘அல்ஹிலால்’ என்ற இஸ்லாமிய வங்கிதான் முதன்முதலாக மார்ச் 2010ல் தனது கிளையொன்றை கஜகஸ்தானில் துவங்கியது. 50 பணியாளர்களும் 90 மில்லியன் டாலர் முதலீடுமாய் அதுதடம் பதித்தது என்கிறார் முதன்மை நிர்வாகியாக உள்ள பிரசாத் ஆப்ரஹாம். 2012 முடிவதற்குள் அதன் இலக்கு 200 மில்லியன் டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டது என்கிறார் அவர் தொடர்ந்து.

நாட்டு சட்டங்கள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங் கள் அமல்படுத்துவதற்கு வசதியாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது நடுத்தர நுகர்வோர் பயன்படத்தக்க விதத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கார்கள் வாங்க வட்டியில்லா கடனுதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்கிறார் பதாஹ் பைனான்ஸ் அமைப்பின் தலைவரான ஜரகாஸ் நூர்பொஸோவ். பதாஹ் பைனாஸ் மூலமாக ஹஜ் செல்வதற்கான சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டபோது அதன் துவக்க ஆண்டிலேயே பயனாளிகளால் 150000 டாலர் முதலீடு செய்யப்பட்டதையும் அவர் நினைவு கூர்கிறார். “நாட்டின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இஸ்லாமியப் பொருளியல் முறைமையிலேயே தான் பயனடைய விரும்புகிறார்கள். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்தவாறே இருக்கிறது என்கிறார்!”அவர் தொடர்ந்து.

இஸ்லாம் குறித்த உலகளாவிய தவறான பிரச்சாரங்கள், கஜகஸ்தானின் சமயம் சார்பற்ற சட்டங்கள் மற்றும் அந்த இன்னும் முழு இஸ்லாமிய அமைப்புக்குள் வராதது என்று ஏராளமான பின்னடைவுகள் இருந்தாலும் வட்டியில்லா இஸ்லாமிய வங்கியியல் கஜகஸ்தானில் வேகமாகப் பரவிவருகிறது. உலக நாடுகளுக்கு தலைமைத் தாங்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டு பொருளாதார சிக்கல்களிலிருந்து தனது மக்களை மீட்டெடுக்க இஸ்லாமியப் பொருளாதார அமைப்பை அமெரிக்காவில் செயல்படுத்த முன்வரவேண்டும்.

–இக்வான் அமீர்

Check Also

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *