Breaking News

மத்தியப் பிரதேசத்தில் பரிதவிக்கும் சிறுபான்மையினர் – பகுதி 2

மதவெறி காவி அமைப்புகள் மக்களைப் பிளவுபடுத்துவதோடு அதிகாரத்தையும் சுவைத்துக் கொண்டிருக்கும் போது காங்கிரஸை அதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்த்த ஒரு சமுதாயத்தை சட்டப்பூர்வமாகக் கூட பாதுகாக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கவே இல்லை. அரசியல் பின்புலம் இல்லாததால் முஸ்லிம்கள் எளிதாக வேட்டையாளப்பட்டார்கள். காவல் துறையினரின் சித்திரவதைகள் நினைத்தாலே கலங்கித் தவிக்கும் அளவு வேதனை அடைந் தனர்.

1990களில் இருந்தே சிமி அமைப்பை மத்தியப் பிரதேச காவல்துறையினர் குறிவைத்து துன்புறுத்தினர். பாஜக ஆட்சிக்குப் பிறகு இந்தக் கொடுமை அதிகரித்தது.

பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உலவுகின்றனர். மேலும் உச்ச பதவிகளையும், எக்கசக்க அதிகாரங்களையும் அனுபவித்தனர்.

ஆனால் பாப்ரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டிய சிமி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இக்பால் நாகூரி என்பவர் 1980ல் இருந்து 92 வரை சிமியின் உறுப்பினராக இருந்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் 1982ஆம் ஆண்டு இந்தூர் நகரத்தின் சிமி தலைவராகவும் இருந்துள்ளார். இவர் அந்த அமைப்பில் இருந்து ஓய்வுபெற்ற 5 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை அவரையும், அவருடன் வேறு ஓய்வுபெற்ற சிமி நபர்களையும் கைது செய்தது. பாப்ரி மஸ்ஜிதை இடித்ததற்காகவும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கை கண்டித்ததற்காகவும் அதுதொடர்பாக சுவரொட்டி ஒட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இக்பால் நகோரியும் அவரது நண்பர்களும் ஒன்பது ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டிற்கு வெளியுலக காற்றை சுவாசித்த இக்பால் நகோரி, தனது சித்திரவதை வாழ்வைக் குறித்து குறிப்பிட்ட போது, தன்னை மட்டுமல்ல, தன்னைப்போல பல இளைஞர்களை சிமியின் பெயரால் கொடு மைப்படுத்தியதாக தெரிவித்தார். வயது வேறு பாடு இல்லாமல் முதியவர்களைக் கூட துன்புறுத்தியதாக தெரிவித்தார்.

60 வயதில் இருந்து 80 வயது முதியவர்களையும் கூட அவர்களை விட்டுவைக்கவில்லை. மத்தியப் பிரதேச காவல்துறையின் கயமைத்தனத்தை தோலுரித்துக் காட்டும் இக்பால் நகோரி, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிமியின் உறுப்பி னராக இருக்க முடியாது என்பதுகூட அறியாமல் ஏராளமான முதியவர்களை சிமியின் பெயரால் அடைத்து கொடுமைப்படுத்திய சம்பவங்களும் நடந்தன என்றார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘நிரபராதிகள்’ என விடுவிக்கப்பட்ட பின்னரும் தங்களது வாழ்வு இன்னமும் அச்சுறுத்தலின் பிடியிலேயே இருப்பதாகக் கூறுகிறார்.

அரசுகளின் உயர் பதவிகளில் இருப்போர் அல்லது ஹிந்துத்துவா அமைப்புகளின் முக்கியப் பிரமுகர்கள் யாராவது இந்தூருக்கு வந்தால், இவர்களையெல்லாம் முன்னெச்சரிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்கிறார்களாம். காவல்துறையினர் வேண்டுமென்றே எங் களைப் பற்றி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவார்கள். அதன் தொடர்ச்சியாக கைதுகள் நடக்கும். பொதுமக்களின் மத்தியில் தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார் இக்பால் நகோரி.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் சிமியின் தலைவராக இருந்த சாஜித் பாஷா தனது துயரக் கதையைக் கூறும்போது 1997ஆம் ஆண்டுதான் சுவரொட்டி வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். 2000ஆம் ஆண்டு நவித்-இ-ஷெஹர் என்ற கருத்தரங்கம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். இது இரு சமயங்களுக்கு இடையே வன்மு றையைத் தூண்டக்கூடியது என காவல்துறையினர் குற்றம்சாட்டி சாஜித் பாஷாவைக் கைது செய்தனர். 2006 துண்டுப்பிரசுர வழக்கு 2009ஆம் ஆண்டு கருத்தரங்கு வழக்கு இரண்டிலும் குற்றமற்றவர் என சாஜித் நிரூபிக்கப்பட்ட போதிலும் காவல்துறையினரின் உள்நோக்கம் கொண்ட மெத்தனப் புத்தியினால் நெடுநாட்கள் கழித்தே விடுதலை செய்யப்பட வேண்டியதாயிற்று என்கிறார்.

தன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளால், தான் பணிபுரிந்துவந்த முன்னணி மருத்துவ மனையில் இருந்து பணிநீக்கம் செய்யப் பட்டதையும் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேசத்திலோ அல்லது அகில இந்திய அளவிலோ ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால்கூட காவல்துறையினர் தங்கள் வீட்டை உடனடியாக முற்றுகையிட்டு சோதனை செய்யும் மனித உரிமை மீறலை விவாதித்தார் சாஜித். நள்ளிரவு நேரம் ஆனாலும் கூட தயங்காமல் குறைந்தது 30 காவலர் களைக் கொண்ட ஒரு காவல் படையே தங்கள் வீட்டை, ரெய்டு என்ற பெயரில் துவம்சம் செய்வது வழக்கம் என்கிறார் சாஜித் பாஷா.

காவல்துறையின் தொடர் சித்திர வதைகளுக்கு அஞ்சி மத்தியப் பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிரா வுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார் சாஜித். ஆனால் இவர் மீது வேண்டு மென்றே போடப்பட்ட வழக்கு களுக்காக ஒரு மாதத்திற்குள் இரண்டு மூன்று தடவை வரவேண் டியதுள்ளது என்றவர் மேலும் தொடர்ந்தார். ஒருநாள் விசாரணைக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால்கூட, ‘தீவிரவாதி தலைமறைவு’ ‘தப்பி ஓட்டம்’ போன்ற தலைப்புகளை ஊடகங்களில் காவல்துறையினரே வரவழைக்கின்றனர். ஆனால் மிகப்பெரிய படுகொலை செய்தவர் கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யக்கூட யாருக்கும் துணிவில்லை என்றார். காவல்துறையினரின் சித்திரவதை களால் தான் மட்டுமல்ல, தனது ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்பட்டது.; துன்புறுத்தப்பட்டது என்கிறார் சாஜித். தனது உறவினர்கள், நண்பர்கள் கூட துன்பம் அனுபவித்துள்ளதாவும், தங்கள் உறவுகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கக் கூட அனுமதியில்லை என்றும் கூறுகிறார். தனது பெற்றோரால் ஹஜ் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது எனவும், தங்களோடு நெருங்கிப் பழகவும் தங்கள் உறவினர்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறும் சாஜித், தாங்கள் சமூகக் கட்டமைப்பில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக வேதனை யுடன் கூறுகிறார்.

மேலும் உஜ்ஜைன் மற்றும் இந்தூர் பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் துன் புறுத்தப்படுகின்றனர். பொய் வழக்கு களால் அலைக்கழிக்கப்படுகின்ற னர். நெடுங்காலமாக அவர்கள் தொடர்பான வழக்குகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. தனது வழக்கைப் பொறுத்தவரை தனக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் தான் இன்றுவரை குற்றவாளிதான் என்கிறார் அர்ஷத் பில்கிராமி. இவர் முன்னாள் சிமி உறுப்பினராம். இவர் சர்ச்சைக்குரியசுவரொட்டி ஒட்டியதாக 2000ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சிமி அமைப்பின் அகில இந்திய மாநாட்டை மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடத்த திட்டமிட்டது சிமியின் அகில இந்தியத் தலைமை. ஆனால் அன்றைய மத்தியப் பிரதேசத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அனுமதி மறுத்தது. சிமி 2001ஆம் ஆண்டு மத்தி யிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே தடை செய்யப்பட்டது. சிமியின் போபால் மாநாட்டுக்கு தடை விதித்த மத்தியப் பிரதேச மாநில அரசின் முதல் அமைச்சராக அப்போது வீற்றிருந்தவர் யார் தெரியுமா? இன்று மதச் சார்பற்ற கொள்கைகளை நீட்டி முழக்கி ஹிந்துத்துவ வெறி சிந்தனாவாதிகளுக்கு சிம்மசொப் பனமாக விளங்கும் திக்விஜய்சிங் தான் அன்றைய ம.பி. முதல்வர். மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப் பட்டவுடன் சிமி அமைப்பினர் கிளர்ந்து எழவில்லை; போராட வில்லை. மறியல் செய்யவில்லை. பேருந்துகளைக் கொளுத்தவும் இல்லை. ஆனால் அவர்கள் ஒரு சுவரொட்டி மட்டுமே ஒட்டி னார்கள். அந்த சுவரொட்டியில் திருக் குர்ஆனில் வசனம் மட்டுமே இருந்தது. திருக்குர்ஆனின் வசனத்தை அச்சிட்டதற்காக கைது செய்தார்களா? முஸ்லிம்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்ய திக்விஜய்சிங் அரசு உத்தரவிட்டதா?

வியப்பால் விரிகிறதல்லவா உங்களின் விழிகள். விடைதான் என்ன? அது அடுத்த வாரம்…

 

–ஹபீபா பாலன்

Check Also

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *