Breaking News

காவல்துறையின் சித்ரவதையால் தினமும் 43 பேர் சாவு!

உலகம் முழுவதும் ஆதிக்க சக்திகளால் நடைபெற்று வரும் சித்ரவதைக்கு எதிரான நாளாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. காவல் துறையினரின் சித்ரவதைகளால் பாதிக்கப் படுபவர்களுக்கு ஆதரவாக இந்த நாளை மனித உரிமை அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைப் பற்றிய அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையை சமீபத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் (National Human Right Commission (NHRC) மற்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்பும் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையினரின் சித்ரவதையால் 1 லட்சத்து 8 ஆயிரம் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையின் சித்ரவதையால் தினந்தோறும் 43 பேர் இறக்கின்றனர் என்று இந்திய மனித உரிமை அமைப்பும், ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பும் இணைந்து அறிவித்துள்ளன. NHRC-யிடம் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மட்டுமே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. NHRC- யிடம் புகார் தெரிவிக்காதவர்களின் எண்ணிக் கையையும் சேர்த்தால் இதைவிடக் கூடுதலாகத் தான் காவல்துறையினரின் சித்ர வதைகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காவல்துறையால் நடத்தப்படும் சித்ரவதைகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்தாலும் அதிகமாக சித்ரவதைகள் நடப்பது காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒரிஸா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான் நடைபெறுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையின் சித்ரவதைகள் கொடுமை யானவை. இரும்புக் கம்பிகளால் காலை உடைப்பது, இரண்டு கால்களுக்கு மத்தியில் தீயை எரிப்பது, மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது போன்ற பல்வேறு சித்ரவதைகளை காவல்துறையினர் செயல் படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, சத்தீஸ்கர் மாநிலத்தி லுள்ள தண்டேவாடா மாவட்டத்தில் ஆதிவாசி கள் வாழும் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக சோனி சோரி என்பவர் பணியாற்றி வந்தார். இந்தப் பெண் ஆசிரியை எவ்வித ஆதாரமுமில்லாமல், மாவோ யிஸ்ட் என்று கூறி 2011 அக்டோபர் 4ம் தேதி சத்தீஸ்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த ஆசிரியைக்கு நடந்த கொடுமையோ சோகக்கதை. 2011 அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் தண்டேவாடா காவல் நிலையத்தில் உள்ள மாவட்டக் கண்காணிப் பாளர் அன்கித் கார்கின் அறையில் இரவு நேரத்தில் ஆசிரியை சோரியை மூன்று காவலர்கள் சித்ரவதை செய்கின்றனர். சோரியை நிர்வாணப்படுத்துகின்றனர். பின்னர் சோரியின் மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சுகின்றனர். வலிதாங்க முடியாமல் ஆசிரியை சோரி மயக்க மடைந்து விடுகிறார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொல்கத்தாவில் உள்ள NRS மருத்துவமனையில் வைத்து சோரியின் மர்ம உறுப்பிலிருந்து கல் வெளியே எடுக்கப்பட்டது. ஆசிரியை சோரிக்கு ஏற்பட்ட கொடுமையை நிரூபிக்கும் விதமான மருத்துவ ரிப்போர்ட்டின் நகல் தங்களிடம் உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை 28.06.2012 சென்னை பதிப்பில் குறிப்பிட்டிருந்தனர். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ரகசிய சித்ரவதைக் கூடங்கள் காவல்துறையினரால் நடத்தப்படுகிறது என பல்வேறு ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர். தமிழகத்திலும் ரகசிய சித்ரவதைக் கூடங்கள் இருப்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்டது. இந்த சித்ரவதைக் கூடங்களால் மக்களை காவல்துறையினர் கொடுமைப்படுத்துவதும், கொலை செய்வதும் தொடர்கதையாகியுள்ளது. காவல்துறையின் சித்ரவதைகளால் தற்கொலையென்றே காவல்துறை யினரால் வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை.

சென்ற வியாழக்கிழமை சென்னை டி.பி.ஐ. முன்பாக போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர் அமைப்பினரைக் காவல்துறையினர் கைது செய்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். பெண்கள், சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் போலீஸ் ஜீப்பில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இலவசக் கல்வியைக் கொடு, தனியார் பள்ளிக் கூட கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்து, தனியார் பள்ளிக்கூடத்தில் 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கவேண்டுமென்ற சட்டத்தை அமல் படுத்தாத பள்ளிக்கூடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நடைபெற்ற நியாயமான ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறை யினர் அடக்குமுறையை ஏவியுள்ளனர். மக்களாட்சி என்று சொல்லப்படுகிற இந்தியாவில்தான் காவல்துறையினரின் அடக்கு முறையும், சித்ரவதைகளும் அதிகமாக நடைபெறுகின்றன. மக்களுக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து செயல்படுமேயானால் மக்கள் புரட்சிதான் ஏற்படும். பல நாடுகளில் மக்கள் புரட்சி நடைபெறு வதைப் பார்த்த பிறகாவது ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களைப் பாதுகாக்கத்தான் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறோம் என்ற உணர்வு ஒவ்வொரு காவல்துறையினருக்கும் இருக்க வேண்டும்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மனிதநேயத்தோடு காவல்துறையினர் செயல் பட்டால் நாடு அமைதியாக இருக்கும். அதற்கான பயிற்சியை காவல்துறையினருக்கு அரசு வழங்கவேண்டும் என்பதே மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

 

–என்.ஏ.தைமியா

Check Also

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *