Breaking News

மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கும் கோவை சிறைவாசி! உருக்கமான தகவல்கள்

தமிழக சிறைகளில் பல்லாண்டுகளாக வாடும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் சோகம் ஆறாத காயமாக சமுதாய மக்களின் மனதினில் நிலைபெற்று விட்டது. பெரும்பெரும் பாதங்களை செய்தவர்கள், குறிப்பாக இந்த தேசத்தையே உலுக்கிய மாலேகான், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் முக்கியக் குற்றவாளிகளில் பலர் சுதந்திரமாக உலகை உல்லாசமாக சுற்றிவரும் நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிவரும் முஸ்லிம் சிறைவாசிகளின் சட்டப்படியான, மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய விடுதலையைக்கூட இன்னமும் வழங்காமல் அரசுகள் இரக்கமற்ற மவுனம் சாதித்து வருவது அனைத்து மக்களையும் வேதனையிலும் விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது.

ஒருவரை பல்லாண்டு காலமாக சிறைகளில் அடைத்துவைத்து கொடுமைப் புரிவது, அவரது குடும்பத்திற்கும் சேர்த்தே இழைக்கப்பட்ட அநீதியாகும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள சட்டப்பூர்வ உரிமைகளைக்கூட மறுக்கப்படும் அவல நிலையை என்னவென்று சொல்வது?

கடந்த திமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதில் திமுக சார்பு சிறைவாசிகளே அதிக அளவு விடுவிக்கப்பட்டார்கள்.

சிறையிலிருந்தவாறே பட்டம் பெற்ற அபுதாஹிருக்கு பட்டம் அளித்து வாழ்த்து தெரிவிக்கும் கல்வித்துறை, காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள்

 

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில சிறைவாசிகளைத் தவிர ஏனையோர் விடுவிக்கப்படவில்லை. பலர் நீதி மறுக்கப்பட்டதால் வேதனையுடன் சிறைக் கொட்டடியில் உழல்கின்றனர். சிலர் தாங்கள் உணர்ச்சி வேகத்தில் செய்துவிட்ட குற்றச்செயல்களை எண்ணி எண்ணி மனதுக்குள் உருகி திருந்தி எஞ்சிய வாழ்நாளிலாவது நிம்மதியாகக் கழிக்கலாம் என ஏங்கியபடி தவிக்கின்றனர். அந்த சிறைவாசிகளின் குடும்பம் அநாதரவாக விடப்பட்டு நிர்க்கதியாய் ஏனென்று கேட்க, நாதியற்ற நிலையில் தவிக்கிறது. ஏறக்குறைய சிறுபான்மை சமூகத்தின் மீது சில பொறுப்பற்ற அதிகார வர்க்கத்தினரால் தொடுக்கப்பட்ட யுத்தமாகவே இது கருதப்படுகிறது.

சிறைவாசிகள் பரோலில் வெளிவரும் நாட்கள், திருமணம் நடைபெறும் நாள், திருமணம் முடிந்த உடன் புது மனைவி மற்றும் பெற்றோருடன் கண்ணீர் மல்க பிரியாவிடை, குடும்பத்தையே புரட்டிப்போடும் மரணங்களின் போது மட்டும் போலீஸ் பட்டாளத்தின் கெடுபிடி பாதுகாப்புடன் உயிரற்ற உடல்களைப் பார்க்க உயிருள்ள சடலங்களாக வந்து பார்த்துவிட்டுக் கதறி மீண்டும் சிறை செல்வது இவை மட்டுமே ஒரு சிறைவாசியின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இதோடு முடிந்துவிடுகிறது.

சிறைக் கம்பிகளின் பின்னால் வாடும் ஒவ்வொரு இளைஞனின் பின்னால் இதைப் போன்ற ஒரு சோகக்கதை இருந்தே வருகிறது. இதைவிட நெஞ்சைத் துடிதுடிக்க செய்யும் அவல நிலைதான் அபுதாஹிர் என்ற சிறைவாசிக்கு நிகழ்ந்துள்ளது.

அபுதாஹிர், கோவை மத்திய சிறையில் வாடிவரும் 33 வயது இளைஞர். கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்.

இவருக்கு 18 வயதாக இருந்தபோது மதுரையில் நிகழ்ந்த ஒரு படுகொலையில் இவர் உட்பட மூவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 1998ல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

2003ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இளம் வயதில் சிறைக்குள் தள்ளப்பட்ட அபுதாஹிர் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டவராவார். ஆனால் சிறை வாழ்க்கை காலத்தில் மிகுந்த ஆர்வமுடன் கல்வி கற்றார். இளங்களை நிர்வாக இயல் ((B.B.A)) மற்றும் முதுகலை வரலாறு (M.A) ஆகிய பட்டப்படிப்புகளை கற்றுத் தேர்ந்தார்.

இந்த இளைஞனுக்கு SYSTEMIC LUPUS ERYTHEMATOUS என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நோயின் குணம் என்னவெனில், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து கொண்டே இருக்கும். அபுதாஹிரின் பார்வை குறையத் தொடங்கிவிட்டது. சிறுநீரகங்களும் ஏற்கனவே பாதிப்படையத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் அபுதாஹிருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. அவர் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி அபுதாஹிர் விடுதலை செய்யப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவரது இறுதி நாட்களை நிம்மதியாகக் கழிக்க அந்த விடுதலை உதவும் என அபுதாஹிரின் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

மேலும் துன்பப்படாமல் நிம்மதியாக மரணிக்க அரசு உதவவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார் அபுதாஹிரின் சகோதரர் சிக்கந்தர் பாஷா. இவர் கோவை உக்கடம் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

என் தம்பியின் வாழ்நாள் உடல் அளவிலும் மனரீதியாகவும் எண்ணப்பட்டு வருகிறது என்றார் அவர்.

மேலும் அபுதாஹிருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகள் குறித்து சிறைத்துறை கவனம் செலுத்தவில்லை என அவரது நண்பர் சம்சுதீன் கூறுகிறார். அபுதாஹிரின் உடல்நலக் குறைவை சீர்செய்யும் அளவு சிகிச்சைக்கான வசதிகள் கோவை மருத்துவக் கல்லூரியில் இல்லை. இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக நாங்கள் அறிந்துகொண்டோம் என்று கூறும் அபுதாஹிரின் நண்பர் சம்சுதீன் அபுதாஹிரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அவரது மோசமான உடல்நிலையில் இருந்து ஓரளவாவது அவரை மீட்க அரசு ஆவன செய்யவேண்டும் என்றார்.

அபுசித்தப்பா உடம்பு சரியில்லாத நிலையிலேயே ஒரு தடவை (பரோலில்) எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் சாப்பிடும் உணவைவிட அதிகமாக அவர் சாப்பிடும் மாத்திரைகள் இருந்தன. சித்தப்பா எப்போது வருவார் என ஏங்குகிறார் அபுதாஹிரின் அண்ணன் மகள் ஆறு வயது சுஹைபா.

அபுதாஹிர் உடனடியாக விடுதலை செய்யப்பட தமிழக அரசு கருணை அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரைப் போன்ற பல்லாண்டுகளாக சிறைகளில் வாடும் சிறைவாசிகளை விரைவில் விடுதலை செய்ய தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

 

–அபுசாலிஹ்

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *